நெல் அறுவடை இயந்திரங்களை 'உழவர் செயலி' வழியாக பெறலாம்
நெல் அறுவடை இயந்திரங்களை 'உழவர் செயலி' வழியாக பெறலாம்
ADDED : பிப் 16, 2025 07:22 AM
சென்னை : வேளாண் துறை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவங்களில், 35.16 லட்சம் ஏக்கரில், நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 2.2 லட்சம் ஏக்கர் கூடுதலாகும். டெல்டா மாவட்டங்களில், 13 லட்சம் ஏக்கர் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டை விட, ஒரு லட்சம் ஏக்கர் கூடுதல்.
தற்போது அறுவடை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப உரிய இடங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள், தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், வேளாண் துறை மற்றும் தனியார் துறை வாயிலாக, 4,505 நெல் அறுவடை இயந்திரங்கள்; 51 வைக்கோல் கூட்டும் கருவிகள்; 51 வைக்கோல் கட்டும் கருவிகள் ஆகியவற்றை, உழவர் செயலி வாயிலாக, வாடகைக்கு பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, நெல் அறுவடைக்கு இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள், தங்களது மொபைல் போனில், 'உழவர் செயலி'யை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பதிவு செய்து, வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள், 4,505 நெல் அறுவடை இயந்திரங்கள் குறித்த தகவல்களை, https://aed.tn.gov.in/ta/harvester// இணைய தளம் வாயிலாக அறியலாம். மேலும், விபரங்களுக்கு 88382 24538 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

