புதிய உச்சத்தை எட்டுகிறது நெல் கொள்முதல் ரூ.10,000 கோடியை தாண்டியது பட்டுவாடா
புதிய உச்சத்தை எட்டுகிறது நெல் கொள்முதல் ரூ.10,000 கோடியை தாண்டியது பட்டுவாடா
ADDED : ஜூலை 23, 2025 12:18 AM

சென்னை:நடப்பு சீசனில், இதுவரை நெல் கொள்முதல் செய்ததற்காக, 4.94 லட்சம் விவசாயிகளுக்கு 10,561 கோடி ரூபாயை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வழங்கி உள்ளது.
சீசன் முடிவடைய இன்னும், 40 நாட்கள் இருப்பதால், நெல் கொள்முதலில் புதிய உச்சம் எட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
நடப்பு நெல் கொள்முதல் சீசன், 2024 செப்., 1ல் துவங்கியது. அடுத்த மாதம், 31ல் முடிவடைகிறது. விவசாயிகளுக்கு, 100 கிலோ எடை உடைய குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு, 2,450 ரூபாய்; பொது ரக நெல்லுக்கு, 2,405 ரூபாய், குறைந்தபட்ச ஆதரவு விலையாக, மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன.
இந்த சீசனில் நேற்று வரை, 4.94 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 43.66 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக அவர்களின் வங்கி கணக்கில், 10,561 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2023 - 2024 சீசனில், இதே காலத்தில், 32.13 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த சீசனில், 11.53 லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை அதிக அளவாக, 2020 - 21 சீசனில், 44.90 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
நடப்பு சீசன் முடிவடைய இன்னும், 40 நாட்கள் உள்ளன. தினமும் சராசரியாக, 15,000 டன் நெல்வரத்து உள்ளது. இதனால், இந்த சீசனில் நெல் கொள்முதல், 50 லட்சம் டன் என்ற புதிய உச்சத்தை எட்டும் என, உணவுத்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.