டெல்டாவில் காய்ந்து வரும் சம்பா, தாளடி நெற்பயிர்கள்
டெல்டாவில் காய்ந்து வரும் சம்பா, தாளடி நெற்பயிர்கள்
UPDATED : நவ 22, 2026 06:57 PM
ADDED : நவ 22, 2026 06:57 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறக்காததாலும், குறுவை மற்றும் தாளடி பயிர்கள் கருகி வருகின்றன.
வழக்கமாக, டெல்டா சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் இருந்து ஜூன், 12ல் திறக்கப்படும் தண்ணீர், செப்., 1ல் தான் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை வைத்தும், வடகிழக்கு பருவமழையை நம்பியும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட விவசாயிகள், ஏழு லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், 45 நாட்களுக்கு பின் நிறுத்தப்பட்டது. வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு பெய்யவில்லை. சம்பா, தாளடி நெற்பயிர்கள் வளர்ந்து, கதிர் வரும் பருவத்தில் தண்ணீர் இல்லாமல் வாடுவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, புத்துார், நெடுவாசல், பூதலுார், செங்கிப்பட்டி, ஒரத்தநாடு பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளிலும், நாகை மாவட்டம், வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், இரண்டு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.
அம்மாபேட்டை மற்றும் மன்னார்குடி அருகே எளவனுார் பகுதியில், காய்ந்து கிடக்கும் நெல் வயல்களில், தண்ணீர் குடத்துடன் பெண்கள் கும்மியடித்து நுாதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறுகையில், ‘காவிரி டெல்டா பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து ஏக்கருக்கு, 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
பயிர் இன்சூரன்ஸ் செய்துள்ள விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
