ரயிலில் கூட பெண்கள் பயணிக்க முடியாத நிலை அரசுக்கு பழனிசாமி கண்டனம்
ரயிலில் கூட பெண்கள் பயணிக்க முடியாத நிலை அரசுக்கு பழனிசாமி கண்டனம்
ADDED : பிப் 07, 2025 06:33 PM
சென்னை:'ரயிலில் கூட பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியாத அவல நிலை, தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கோவையில் இருந்து திருப்பதி சென்ற ரயிலில், கர்ப்பிணிக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால், ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்; இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் பெண்கள், பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லுாரிகளுக்கு, பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை. தற்போது ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம்.
தி.மு.க., அரசு, பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே, இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும். கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல், பாலியல் தொல்லை அளித்துள்ள, வக்கிர புத்தி உடைய கயவர்கள் மீது, மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில், பெண் எஸ்.ஐ., மீது, காவல் நிலையம் உள்ளே புகுந்து தாக்குதல் நடந்தியுள்ளனர். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கு, காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
திருச்சி, மணப்பாறையில், நான்காம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி, நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தில், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.
பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தி.மு.க., ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருகிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் இருக்கிறார்.
தி.மு.க., ஆட்சியில், குழந்தைகளுக்கு பள்ளியில் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பில்லை. மூதாட்டிகளுக்கு, வசிக்கும் இடங்களில் பாதுகாப்பில்லை. காவலர்களுக்கு, காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***