பா.ஜ.,வை காப்பாற்றும் பழனிசாமி * சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
பா.ஜ.,வை காப்பாற்றும் பழனிசாமி * சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
ADDED : பிப் 19, 2025 09:06 PM
சென்னை:'நிதி விவகாரத்தில், தமிழகமே கொந்தளிப்பில் இருப்பதை மடைமாற்றி, பா.ஜ.,வை காப்பாற்றுகிறார் பழனிசாமி' என, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
பாலியல் புகார்களை வைத்து, அரசின் மீது அவதுாறு பரப்புவதே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தொடர் கதையாகி விட்டது. புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது நடவடிக்கை எடுக்கிறது போலீஸ் துறை. ஆனால், பாதுகாப்பில்லை என சொல்லி, பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே பழனிசாமிக்கு வழக்கமாகி விட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசு பள்ளியில் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததும், உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். ஆனால், நடவடிக்கை எடுத்த பின், பழனிசாமி விமர்சிப்பது, தன்னை முன்நிறுத்தி கொள்ளும் அரசியலுக்குத் தானே.
மும்மொழிக் கொள்கையை பா.ஜ., புகுத்த முயற்சிக்கிறது. தமிழகத்திற்கு உரிய வரிப் பகிர்வை தருவதில்லை. மத்திய பட்ஜெட்டிலும் தமிழக திட்டங்கள் இல்லை. தொடர்ந்து பிரதமர் மோடி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இதையெல்லாம் மடைமாற்றி, தன் பா.ஜ.,வின் ராஜவிஸ்வாசத்தை காட்டுகிறார் பழனிசாமி.
ஒரு சில குற்றச்சம்பவம் நடப்பதை வைத்து, ஒட்டுமொத்தமாக பள்ளிக் கூடங்களில் பாதுகாப்பில்லை என, மாணவியரையும், பெற்றோரையும் பழனிசாமி அச்சுறுத்துகிறார். இது அவருடைய கேவலமான மனநிலை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.