ஆ.மு., - ஆ.பி., என தி.மு.க., இரட்டை வேடம் பழனிசாமி குற்றச்சாட்டு
ஆ.மு., - ஆ.பி., என தி.மு.க., இரட்டை வேடம் பழனிசாமி குற்றச்சாட்டு
ADDED : ஏப் 05, 2025 02:19 AM

சென்னை:''ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு; வந்த பின் ஒரு நிலைப்பாடு என, தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சட்டசபை வளாகத்தில், அவர் அளித்த பேட்டி:
செய்தியாளர்கள் பாதுகாப்பு குறித்து, பேச அனுமதி கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டதால், வெளிநடப்பு செய்தோம்.
ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில், அவரது தாய் தனியாக இருந்தபோது, 50 பேர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். பொருட்களை எடுத்துச் சென்றதுடன், சமையல் பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.
கடும் நடவடிக்கை
வீட்டிற்குள் மலத்தை கொட்டி, சாக்கடை நீரை ஊற்றி, மிக மோசமான முறையில் இச்செயலை செய்துள்ளனர். இதுபோன்ற கீழ்த்தரமான செயல், தமிழகத்தில் நடந்தது இல்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட யாரும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்; இது அராஜகத்தின் வெளிப்பாடு.
துாய்மைப் பணியாளர் போர்வையில் ஈடுபட்டவர்கள், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அரசு நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை, சபையில் எடுக்கவில்லை.
அனைவரும் சமம்
பட்டப்பகலில் இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை எடுக்க மறுத்ததுடன், அமைச்சர் துரைமுருகன், 'இது எல்லாம் பெரிய விஷயமா?' எனக் கேட்கிறார். இதுகுறித்து விவாதிக்கக் கூடாது என்றால், எதைப் பற்றி விவாதிப்பது?
அவர் பிரபலமானவர். அப்படிப்பட்டவருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்?
இங்கு ஆட்சி நடக்கிறதா அல்லது சர்வாதிகாரம் நடக்கிறதா என்று தெரியவில்லை. சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, சாதாரண வழக்கு போடுகிறது. மிக மோசமாக, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துஉள்ளது.
கடந்த 10 நாட்களாக, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேட்டால், பதில் இல்லை. இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பது தெரியும். நடவடிக்கை எடுக்காததால், எங்களை பேச விட மறுக்கின்றனர். ஜனநாயக நாட்டில் அனைவரும் சமம்.
தமிழக காவல் துறை, தி.மு.க.,வின் ஏவல் துறையாக செயல்படுவது கேவலமாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
அதற்கு மாறாக, தாக்குதலுக்கு துணை போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது; எந்த மனிதனுக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு; வந்த பின் ஒரு நிலைப்பாடு என, தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.