மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வேண்டப்பட்டவரை காப்பாற்ற முயற்சி அமைச்சர்கள் மீது பழனிசாமி குற்றச்சாட்டு
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வேண்டப்பட்டவரை காப்பாற்ற முயற்சி அமைச்சர்கள் மீது பழனிசாமி குற்றச்சாட்டு
ADDED : ஜன 01, 2025 06:20 AM

சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை காப்பாற்ற, அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு பேசி வருவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானதும், இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'யார் அந்த சார்?'
அ.தி.மு.க., பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி தன் புகாரில் குறிப்பிட்ட, 'சார்' யார் என்பது, இதுவரை தெரியவில்லை. உண்மைக் குற்றவாளி தப்பிவிடக்கூடாது; தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, அ.தி.மு.க., போராட்டங்களை நடத்தி வருகிறது.
மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, 'யார் அந்த சார்?' என்பதை கண்டறிய வேண்டும்.
தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை காப்பாற்றவே, உயர் கல்வி, சட்டம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்கள் வரிந்து கட்டிக்கொண்டு பேசி வருகின்றனர்.
திருவாரூர் திரு.வி.க., அரசு கல்லுாரி மாணவியர், பாலியல் துன்புறுதல்கள் நடப்பதாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
இன்றைய நிலை
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர், பெண் செவிலியரின் அந்தரங்க படத்தை காட்டி, மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாக, அம்மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது.
அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதற்கு கட்சி மாறிப்போன அமைச்சரே காரணம்.
தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமை புகார் அளித்தாலும் வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை. இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை.
தமிழகத்தில், 2024ம் ஆண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஆண்டாக அமைந்தது. மலரும் 2025ம் ஆண்டு பெண்களுக்கு பாதுகாப்பான ஆண்டாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.,வின் திட்டம்!
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இது தி.மு.க., அரசின் திட்டம் அல்ல. அ.தி.மு.க., ஆட்சியில், நான் முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டம். இதற்காக, அ.தி.மு.க., ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்பட்டது. கொரோனா பேரிடர் காரணமாக, திட்டத்தை அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்த முடியவில்லை. வழக்கம் போல, நாங்கள் துவங்கிய திட்டத்தை, தாங்கள் செய்ததாக பெருமை பேசுகின்றனர்.
- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,

