தற்காப்பு உபகரணங்கள் வைத்து கொள்ளுங்கள் பெண்களுக்கு பழனிசாமி அறிவுரை
தற்காப்பு உபகரணங்கள் வைத்து கொள்ளுங்கள் பெண்களுக்கு பழனிசாமி அறிவுரை
ADDED : ஜன 03, 2025 05:12 AM
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தி.மு.க., அரசு வேடிக்கை பார்ப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 44 மாத தி.மு.க., ஆட்சியில், தமிழகம் குற்ற பூமியாக மாறி விட்டது என்பது, தினமும் நடக்கும் குற்ற சம்பவங்களில் இருந்து உறுதியாவது வேதனை அளிக்கிறது.
போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் முதல், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் வரை, பலர் ஆளும் தி.மு.க.,வை சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்களை காப்பாற்ற, தி.மு.க., அரசு முயற்சிப்பதும் கொடுமையானது.
அண்ணா பல்கலையில்பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, தன் புகாரில் கூறிய 'யார் அந்த சார்?' என்பதை, இதுவரை ஆட்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. இந்த கொடூரத்தின் ஈரம் காய்வதற்குள். ராமநாதபுரத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
சென்னை, வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல், ஓசூரில் 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என, ஊடகங்களில் வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. தி.மு.க., ஆட்சி இருக்கும் வரை, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது.
இந்த ஆட்சியாளர்களும், காவல் துறையினரும்பாதுகாப்பு அளிப்பர் என்ற நம்பிக்கையை, தமிழக மக்கள் இழந்து விட்டார்கள்.
எனவே, பெண்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள, வெளியில் செல்லும்போது, தற்காப்புக்கான 'ஸ்பிரே, எமர்ஜென்சி அலாரம்' உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகள் வந்து கொண்டே இருப்பது பற்றி, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் மவுன சாமியாராக இருப்பது கண்டனத்திற்குரியது.
பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.