'கோவை, மதுரை மெட்ரோ குளறுபடி தி.மு.க., அரசே முழு காரணம்' பழனிசாமி குற்றச்சாட்டு
'கோவை, மதுரை மெட்ரோ குளறுபடி தி.மு.க., அரசே முழு காரணம்' பழனிசாமி குற்றச்சாட்டு
ADDED : நவ 21, 2025 11:59 PM

சேலம்: ''மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, காங்., தலைமையிடத்தில், தி.மு.க., பேசி சுமூக முடிவு காண வேண்டும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.
சேலம் விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:
மேகதாது அணையை கட்ட, புதிய விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என காங்கிரசை சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார். மேகதாது அணை கட்டினால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும்; 20 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி நீர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா அரசு செயல்படுவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் எந்த விளக்கமும் அளிக்காமல் இருக்கிறார். தி.மு.க., அங்கம் வகிக்கும் 'இண்டி' கூட்டணியை சேர்ந்த காங் ., ஆட்சிதான் கர்நாடகாவில் நடக்கிறது.
எனவே, காங்., தலைவர்களான சோனியா, ராகுல் ஆகியோரை, ஸ்டாலின் உடனடியாக தொடர்புகொண்டு தீர்வு காண வேண்டும்.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, 2011 மக்கள் தொகையை குறிப்பிட்டு அனுப்பிய அறிக்கையில், ஏராளமான குழப்பங்கள் இருந்ததால், அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. இந்த குளறுபடிக்கு தி.மு.க., அரசே முழுப்பொறுப்பு.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய நபரை காப்பாற்றவே, சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என தி.மு.க., அரசு எதிர்க்கிறது. கடந்த, 21 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யாததால், போலி வாக்காளர்கள், இரட்டை பதிவு வாக்காளர்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளனர்.
சென்னை தாம்பரம் தொகுதியில் பாகம் எண், 115 காயத்ரி நகர் மூன்றாவது தெருவில், ஒரே வீட்டில், 320 ஓட்டுகள் உள்ளன. மற்றொரு வீட்டில், 110 ஓட்டுகள் உள்ளன. இது போன்ற ஓட்டுகளை நீக்கவே, எஸ்.ஐ.ஆர்., பணியை, அ.தி.மு.க., ஆதரிக்கிறது.
சென்னையில் மாநகராட்சி கவுன்சிலர்களிடமே கட்டுக்கட்டாக, எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. தேர்தல் கமிஷன் விழிப்போடு செயல்பட்டு, உண்மையான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.
அரூரில் பட்டியலின எம்.எல்.ஏ.,வை தரையில் அமர வைத்தது தொடர்பான முழு விபரம் எனக்கு தெரியவில்லை. ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க., சபாநாயகர் என்ற உயர்ந்த இடத்தில் தனபாலை அமர வைத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

