பழனிசாமியும், அண்ணாமலையும் கள்ளக்கூட்டணி: கீதா ஜீவன்
பழனிசாமியும், அண்ணாமலையும் கள்ளக்கூட்டணி: கீதா ஜீவன்
ADDED : ஜன 16, 2025 05:52 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், டூவிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன், மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தமிழகம் தான்
பின், விழாவில் அவர் பேசியதாவது:
தமிழ்நாடு என சொல்லக்கூடாது; தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என சிலர் செயல்பட்டு வருகின்றனர். அதை தைரியமாக எதிர்கொண்டு தமிழகத்தை காக்கவும், மொழியை காக்கவும் முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
ஆனால், 41 சதவீதம் பெண்கள் வேலை பார்ப்பவராகவும், தொழில் முனைவோராகவும் தமிழகத்தில் தான் உள்ளனர். இந்தியாவிலேயே படித்த பெண்கள் அதிகம் இருக்கும் மாநிலமும் தமிழகம் தான்.
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் வரிசையில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்கள் உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு மீது குறையாக சொல்ல எதுவும் இல்லை. அந்த காரணத்தாலேயே, இப்படிப்பட்ட அடிப்படையில்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை தமிழக அரசு மீது அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் சொல்லி அரசியல் செய்து வருகின்றன.
பாலியல் வழக்கில் சென்னையில் அ.தி.மு.க., பிரமுகரும், மதுரையில் பா.ஜ., பிரமுகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவை குறித்தெல்லாம் அண்ணாமலையும், பழனிசாமியும் பேசியிருக்க வேண்டும்; ஏன் செய்யவில்லை? காரணம், குற்றம் இழைத்தவர் தன் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தான்.
முன்னேற்றப் பாதை
இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கள்ளக் கூட்டணி அமைத்துள்ளன. தமிழகம் வளர்ச்சி அடைவது பிடிக்காமல், எப்படியும் மாநில வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காகவே, கெட்ட எண்ணத்தோடு இரு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இதெல்லாம் மக்கள் நன்கு அறிந்தது தான்.
அதனால், இவர்கள் குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளாமல், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று வருகிறார் நம் முதல்வர் ஸ்டாலின்.
இவ்வாறு அவர் பேசினார்.

