முதல்வர் தொகுதியில் அ.தி.மு.க., 'டல்' மாவட்ட செயலர் மீது பழனிசாமி பாய்ச்சல்
முதல்வர் தொகுதியில் அ.தி.மு.க., 'டல்' மாவட்ட செயலர் மீது பழனிசாமி பாய்ச்சல்
ADDED : ஜூன் 27, 2025 12:25 AM
முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்துார் சட்டசபை தொகுதியில் 'பூத்' கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் 30 சதவீதம் மட்டும் முடிந்துள்ளதால் மாவட்டச் செயலர் வெங்கடேஷ்பாபுவை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கை, தேர்தல் வியூகம், கட்சிப் பணிகள் குறித்து, மாவட்டச் செயலர்களுடன் பழனிசாமி இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சில மாவட்டச் செயலர்கள், பூத் கமிட்டிக்கு நிர்வாகிகள் நியமிக்காமல் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலை சமர்ப்பிக்க பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் சட்டசபை தொகுதியில் 30 சதவீதம்; வில்லிவாக்கம் தொகுதியில் 40 சதவீத பணிதான் முடிந்துள்ளது. இவ்விரு தொகுதிகளும், வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலர் வெங்கடேஷ்பாபுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கொளத்துார் தொகுதியில் 259 பூத் கமிட்டிகள் உள்ளன. இதில் 30 சதவீதம் பூத் கமிட்டிகளுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்து விசாரித்தபோது புகைப்படம் உள்ளிட்ட எல்லாம் போலி என்பதை பழனிசாமி கண்டறிந்துள்ளார்.
இதையடுத்து மாவட்டச் செயலர் வெங்கடேஷ்பாபுவை நேற்றுமுன்தினம் இரவு தன் வீட்டிற்கு வரவழைத்த பழனிசாமி சரியாக செயல்படாவிட்டால் பதவியை பறித்துவிடுவேன் என கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கொளத்துார் தொகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் பல்வேறு புகார்களால் கட்சியிலிருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தவில்லை. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்து சிறுமி இறந்தது தொடர்பாகவும் போராட்டம் நடத்தவில்லை.
வடசென்னை அமைச்சருக்கு விசுவாசமாக வெங்கடேஷ்பாபு இருந்து வருகிறார் என கட்சி தலைமைக்கு புகார்கள் சென்றதால் பழனிசாமி அவரை அழைத்து கண்டித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
- நமது நிருபர் -