200 இடங்களில் வெற்றி என பகல் கனவு; முதல்வர் மீது பழனிசாமி பாய்ச்சல்
200 இடங்களில் வெற்றி என பகல் கனவு; முதல்வர் மீது பழனிசாமி பாய்ச்சல்
ADDED : ஜூன் 09, 2025 03:17 AM

சென்னை: ''அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், மேலும் பல கட்சிகள் இணையும்,'' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அரக்கோணத்தில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. விரைவில், இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்.
தி.மு.க., கூட்டணி 200 இடங்களில் வெல்லும் என, செல்லும் இடங்களில் எல்லாம் முதல்வர் பேசி வருகிறார்; அது நடக்கவே நடக்காது. முதல்வர் பகல் கனவு காண்கிறார். வரும் 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.
நான் முதல்வராக இருந்தபோது, ஆறு புதிய மாவட்டங்களை உருவாக்கினோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்காண்டுகள் கடந்தும், ஒரு புதிய மாவட்டம் கூட உருவாக்கப்படவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லுாரிகளை கொண்டு வந்தோம். தி.மு.க., ஆட்சியில் எதுவும் செய்யவில்லை.
கடந்த 2017 முதல் 2021 வரை, அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு, தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டம், அம்மா மினி கிளினிக் போன்ற அற்புதமான திட்டங்களை, தி.மு.க., அரசு முடக்கி விட்டது.
மக்களை பற்றி கவலைப்படாமல், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதே, முதல்வர் ஸ்டாலினின் நோக்கம்.
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, அடுத்து இன்பநிதி பதவிக்கு வர வேண்டும் என்பதே ஸ்டாலினின் குறிக்கோள். ஓட்டளித்த மக்களை பற்றி கவலைப்படாமல், வீட்டு மக்களை பற்றி கவலைப்படும் முதல்வர், ஸ்டாலின் மட்டுமே.
தி.மு.க.,வை சேர்ந்த காந்திசெல்வன், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தபோதுதான், 'நீட்' கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு.
அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காகவே, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். அதனால், அரசு பள்ளிகளில் படித்த, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 3,460 பேர் எம்.பி.பி.எஸ்., படிக்கின்றனர். அவர்களுக்கான கல்வி செலவு முழுவதையும், அ.தி.மு.க., அரசே ஏற்றது.
சுகாதாரத்துறையில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு அ.தி.மு.க., அரசே காரணம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணமான அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தேனீக்களை போல சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.