விஜய் கட்சியை விமர்சிக்க கட்சியினருக்கு பழனிசாமி தடை
விஜய் கட்சியை விமர்சிக்க கட்சியினருக்கு பழனிசாமி தடை
ADDED : அக் 24, 2024 09:58 PM
பா.ஜ., --- த.வெ.க., ஆகிய இரு கட்சிகளையும் விமர்சிக்க வேண்டாம் என, தன் கட்சியினருக்கு பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விரும்புகிறார். இக்கட்சிகளுடன் அ.தி.மு.க., சார்பில், தொழிலதிபர் ஒருவர் பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அதாவது, 130 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், 80 தொகுதிகளில் த.வெ.க., போட்டியிடவும், மீதமுள்ள 24ல் வி.சி., களமிறங்கவும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அளித்த பேட்டியில், 'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பழனிசாமி தான் முடிவு எடுப்பார். அ.தி.மு.க., மிகப்பெரிய இயக்கம். எங்களுடன் கூட்டணி வைக்காதவர்களே கிடையாது' என்றார்.
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கூறுகையில், 'விஜய் மாநாட்டிற்கு நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிக ரசிகர்களை கொண்ட முதல் தர நடிகர் விஜய். கொள்கை முரண்பாடு இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும், அ.தி.மு.க., கூட்டணியில் சேரலாம். விஜய்யுடன் கூட்டணி சேருவதற்கு மக்களும் விரும்புகின்றனர்' என்றார்.
இதற்கிடையில், த.வெ.க., தனித்து போட்டியிட விரும்பினால், கடைசி நேரத்தில் பா.ஜ., - பா.ம.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால், அக்கட்சிகளையும் விமர்சிக்க, கட்சியினருக்கு பழனிசாமி தடை போட்டுள்ளார்.
- நமது நிருபர் -