பிரதமர் மோடி - பன்னீர்செல்வம் சந்திப்பை நயினார் மூலமாக தடுத்த பழனிசாமி
பிரதமர் மோடி - பன்னீர்செல்வம் சந்திப்பை நயினார் மூலமாக தடுத்த பழனிசாமி
ADDED : ஜூலை 29, 2025 01:59 AM

சென்னை: கூட்டணி நிபந்தனையை எடுத்துக் கூறி, பிரதமர் மோடி - முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
துாத்துக்குடி, திருச்சி, கங்கைகொண்ட சோழபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி கடந்த 26, 27ம் தேதிகளில் தமிழகம் வருகை தந்தார்.
கடிதம் அதையொட்டி, கடந்த 24ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பன்னீர்செல்வம், 'துாத்துக்குடி விமான நிலையத்தில் தங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி அளித்தால், அது எனக்கு கிடைத்த மரியாதையாகவும், பாக்கியமாகவும் கருதுவேன்' என குறிப்பிட்டிருந்தார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்டோர், திருச்சி விமான நிலையத்தில் மோடியை வரவேற்றனர். ஆனால், பணிவான வார்த்தைகளுடன் உருக்கமாக கடிதம் எழுதியும், பிரதமர் மோடியை சந்திக்க பன்னீர்செல்வத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பின், பா.ஜ.,வை தொடர்ந்து ஆதரித்து வரும் பன்னீர்செல்வத்தை, அக்கட்சி கைவிட்டு விட்டதாக, அவரது ஆதரவாளர்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதனால், பா.ஜ.,வுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஒருவர் கூறியதாவது:
பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, சில நிபந்தனைகளை பழனிசாமி விதித்திருந்தார். அதை அமித் ஷாவும் ஏற்றுக் கொண்டார்.
முக்கியமானது
அதில், பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றோ, கூட்டணி வைக்க வேண்டும் என்றோ கூறக்கூடாது என்பது முக்கியமானது.
பிரதமர் மோடிக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதிய தகவல் வெளியானதும், அமித் ஷா, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை தொடர்பு கொண்டு, கூட்டணி நிபந்தனையை பழனிசாமி நினைவுபடுத்தியுள்ளார்.
கூட்டணிக்குள் குழப்பம் வேண்டாம் என்பதால், பன்னீர்செல்வம் உடனான சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்துள்ளார்.
ஆனாலும் பழனிசாமி தரப்பில் சந்தோஷம் இல்லை என அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். காரணம், பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேசி, கோரிக்கை மனுவை கொடுக்கத்தான் பழனிசாமி நேரம் கேட்டிருந்தார்.
ஆனால், திருச்சி விமான நிலையத்தில் வரவேற்கும் பலரில் ஒருவராக பழனிசாமியை நிறுத்தி விட்டனர்.
இதனால், வேறு வழியின்றி விமான நிலையத்துக்கு மனுவோடு சென்று காத்திருந்து, பிரதமரை வரவேற்றார். இது, பழனிசாமிக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.