ADDED : ஜூலை 14, 2025 01:55 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயண விபரம் நேற்று வெளியிடப்பட்டது.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை துவக்கி உள்ளார். இம்மாதம் 7ம் தேதி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், பிரசார சுற்றுப்பயணத்தை துவக்கினார். தினம் இரண்டு அல்லது மூன்று சட்டசபை தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
பிரசாரத்தின்போது, விவசாயிகள், தொழில் முனைவோர், நெசவாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் போன்றோரை சந்தித்து பேசி வருகிறார். நேற்று ஓய்வு நாள். இதுவரை 13 சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளார். இன்று கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். முதற்கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை, வரும் 21ம் தேதி நிறைவு செய்கிறார்.
இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை, புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 24ம் தேதி துவக்குகிறார். இப்பயணத்தில், 36 சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை, ஆக., 8ம் தேதி நிறைவு செய்கிறார். பிரசார சுற்றுப்பயண பட்டியலை, அ.தி.மு.க., தலைமை நேற்று வெளியிட்டது.