போதைப்பொருள் கேந்திரமாக தமிழகம் தி.மு.க., அரசுக்கு பழனிசாமி கண்டனம்
போதைப்பொருள் கேந்திரமாக தமிழகம் தி.மு.க., அரசுக்கு பழனிசாமி கண்டனம்
ADDED : மார் 19, 2024 01:56 AM
சென்னை : 'தமிழகத்தை போதைப்பொருள் கேந்திரமாக மாற்றிய தி.மு.க.,வுக்கு, வரும் லோக்சபா தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவர்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஒரு சிறந்த ஆட்சியாளர் என்றால், தாங்கள் செய்த சாதனைகளையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த அரசுகள் செய்யும் சாதனைகளையும் ஒப்பிட்டு பார்ப்பது ஏற்கக்கூடியது.
மக்களின் விதிப்பயனால், நமக்கு கிடைத்துள்ள முதல்வர், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில், குஜராத், அசாம் மற்றும் வட மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு, தனக்குத்தானே ஒரு பொய்மை தோற்றத்தை உருவாக்கி வருகிறார்.
தி.மு.க., அரசின் ஆட்சியாளர்கள், தங்கள் கட்சியில் நியமித்த, அயலக அணி நிர்வாகி தான், வடமாநிலங்களில் இருந்து, தமிழகம் வழியாக, வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி இருக்கிறார் என்ற உண்மையை மறைக்க, தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், தங்கள் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, எந்தவித பதிலோ, மறுப்போ தெரிவிக்காத முதல்வர், பிரச்னைகளை திசை திருப்பும் விதமாக, அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என, பொய் பரப்புரை செய்வது, எள்ளி நகையாடக் கூடியதாக இருக்கிறது.
போதைப்பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காத, தி.மு.க., அரசு, இனியாவது துாக்கத்தில் இருந்து விழித்து, தமிழகத்தின் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க., நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வரும் தமிழக மக்கள், தமிழகத்தை போதைப்பொருள் கேந்திரமாக மாற்றிய தி.மு.க.,வுக்கு, வரும் லோக்சபா தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாசாரத்தால், பேரழிவை நோக்கி பயணிக்கும் இளைஞர் சமுதாயம், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்துக்கு உரியது.
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வரும் செய்திகள், பெற்றோர் மத்தியில் மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளன.
எனவே, தி.மு.க அரசு இனியும் அலட்சிய போக்குடன் செயல்பட்டால், லோக்சபா தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் ஆற்றுவர்.
இவ்வாறு கூறியுள்ளார்.

