அஜித்குமார் அம்மாவுக்கு பழனிசாமி ஆறுதல் : நீதி கிடைக்கும் வரை துணை நிற்போம்
அஜித்குமார் அம்மாவுக்கு பழனிசாமி ஆறுதல் : நீதி கிடைக்கும் வரை துணை நிற்போம்
ADDED : ஜூலை 03, 2025 12:56 AM
நீதி கிடைக்கும் வரை துணை நிற்போம்: பழனிசாமி
காவல் துறை விசாரணையில் உயிரிழந்த திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயிடம் தொலைபேசியில் பேசிய, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆறுதல் கூறினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
துரதிருஷ்டவசமாக சில மனித மிருகங்கள் தாக்கியதில், அஜித்குமார் உயிரிழந்துள்ளார். இதை யாராலும் மன்னிக்க முடியாது. இது மீள முடியாத துயரம். பெற்ற மகனை தாய் இழப்பது மிகப்பெரிய கொடுமை. தாய்க்கு தான் இந்த வலி தெரியும். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடாகாது.
ஆனாலும், மனம் தளராமல் தைரியமாக இருங்கள். நீதிமன்றத்தில் அ.தி.மு.க., சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அஜித்குமார் மரணத்திற்கு யார் யாரெல்லாம் காரணமோ, அவர்கள் தண்டிக்கப்படும் வரை, நீதி கிடைக்கும் வரை, அ.தி.மு.க., துணை நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., அரசு மீது
படிந்த ரத்தக்கறை: அன்புமணி பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்திய காவலர்கள், மனித மிருகங்களாகவே மாறியுள்ளனர். அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் இருந்ததாக, இடைக்கால உடற்கூறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வாயிலும், அந்தரங்க உறுப்புகளிலும் மிளகாய் பொடியைக் கொட்டி கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இந்த அளவுக்கு கொடூரங்களை செய்ய, காவல் துறையில் உயர் நிலையிலிருந்து உத்தரவு வந்திருக்க வேண்டும். அப்படியானால், அந்த அதிகாரி யார்? அஜித்குமாரை நன்கு அடித்து விசாரிக்கும் படி ஆணையிட்ட டி.எஸ்.பி., மீது வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன்?
சொந்த மக்களையே படுகொலை செய்யும் தி.மு.க., அரசு என்னதான் நாடகமாடினாலும், கொடூரத்தின் சின்னமாக அதன் மீது படிந்திருக்கும் ரத்தக் கறையை போக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கைதான போலீசாருக்கு ஜாமின் கூடாது: திருமா
மடப்புரத்தில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தான் செய்வர். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீசாருக்கு நீதிமன்றம் 11 கட்டளைகளை வரையறுத்து இருந்தாலும், அவர்கள் பின்பற்றுவதில்லை. யார் முதல்வராக இருந்தாலும், நானே முதல்வராக இருந்தாலும் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். எப்.ஐ.ஆர்., போடப்படாத வழக்கில் விசாரணை செய்யக்கூடாது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசாருக்கு ஜாமின் வழங்க கூடாது, முதல்வர் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது அவரது நேர்மையை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தே ஆகணும்: ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம், கொன்னையூரில் கனிம வளத்துறை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான ரகுபதி நேற்று, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மூன்று தம்பதியருக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவரிடம், சிவகங்கை மாவட்டத்தில், அஜித்குமார் என்ற காவலாளியின் மரணம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். அதுபோல தப்பு செய்தவர்கள் வருத்தப்பட்டு தான் ஆக வேண்டும். எனவே, காவலர்கள் தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அவர்கள் தண்டனையை அனுபவித்து ஆக வேண்டும். அதை தீர்மானிக்க வேண்டியது நாங்கள் அல்ல; நீதிமன்றம்,'' என்றார்.

