'யாரோ எழுதி கொடுப்பதை வாசிக்கிறார்' ஸ்டாலின் பற்றி பழனிசாமி விமர்சனம்
'யாரோ எழுதி கொடுப்பதை வாசிக்கிறார்' ஸ்டாலின் பற்றி பழனிசாமி விமர்சனம்
ADDED : டிச 22, 2024 02:04 AM
சென்னை: ''அம்பேத்கர் பற்றி அமித் ஷா உட்பட, யார் தவறாக பேசினாலும் தவறு தான்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று, அக்கட்சி சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:
வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், தமிழக அரசு மழை முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
தி.மு.க., அரசின் அலட்சியத்தால், மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
அண்டை மாநில கழிவு கள் தமிழகத்தில் கொட்டப்படுவதை, தி.மு.க., அரசு தடுக்கவில்லை. மக்கள் பிரச்னைகளை சொன்னால், எங்கள் மீது பழி சுமத்துகிறார். பா.ஜ.,வுக்கு எதிராக செயல்படுவதாக காட்டிக் கொள்ளும் தி.மு.க., 43 மாத தமிழக ஆட்சியில், பிரதமர் மோடி ஆட்சியை எங்கும் எதற்காகவும் எதிர்க்கவில்லை.
'இண்டி' கூட்டணியில் இருந்து கொண்டு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து, கருணாநிதி நாணயத்தை வெளியிட்டது தி.மு.க., தான். இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்திலும் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது.
மாநிலத்துக்குள் இருக்கும் மக்கள் பிரச்னைகளை மாநில அரசிடம் தான் சொல்ல முடியும். யாரோ எழுதிக் கொடுப்பதைத்தான் முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் வாசிக்கிறார். அதைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமித் ஷா பேசியதற்கு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஏற்கனவே தெளிவாக பதிலளித்து விட்டார். இது தவறு என்பதை கூறி விட்டார்.
அம்பேத்கர் குறித்து அமித் ஷா உட்பட, யார் தவறாக பேசினாலும் தவறு தான். அதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன்.
இருந்தாலும், இந்த விஷயத்தில் நான் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்பது போல சொல்லி, பா.ஜ.,வுக்கு ஆதரவான நிலையில் அ.தி.மு.க., இருப்பது போன்ற பிம்பத்தை தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும் கட்டமைக்க முயல்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.