முதல்வர், மந்திரிகளுடன் பழனிசாமி 170 நிமிடம் வாக்குவாதம் நீட், டங்ஸ்டன், கடன், பாலியல் வன்கொடுமை விவகாரம்
முதல்வர், மந்திரிகளுடன் பழனிசாமி 170 நிமிடம் வாக்குவாதம் நீட், டங்ஸ்டன், கடன், பாலியல் வன்கொடுமை விவகாரம்
ADDED : ஜன 10, 2025 11:25 PM
சென்னை:தி.மு.க., ஆட்சியில் வாங்கப்பட்ட கடன், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, 170 நிமிடங்கள், முதல்வர், அமைச்சர்களுடன், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சட்டசபையில் நேற்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பழனிசாமி பேசினார்.
அப்போது நடந்த விவாதம்:
பழனிசாமி: கடந்த 2023ல் சட்டசபையில் உரையாற்றிய கவர்னர், ஈ.வெ.ரா., காமராஜர் போன்ற தலைவர்களின் பெயரையும், தமிழின் பெருமைகளை குறிப்பிடும் வாசகங்களையும் தவிர்த்து விட்டு வாசித்தார்.
அப்போதெல்லாம் கவர்னருக்கு எதிராக போராடாத தி.மு.க., இப்போது முழு உரையையும் வாசிக்காமல் சென்ற கவர்னரை எதிர்த்து, ஒரே நாளில் அனுமதி பெற்று போராட்டம் நடத்தியுள்ளது.
எதை திசை திருப்ப இந்த அவசர போராட்டம்? நம் தலைவர்களுக்கு இவ்வளவுதான் மரியாதையா?
முதல்வர் ஸ்டாலின்: கடந்த ஆண்டு கவர்னர் உரையாற்றினார். இந்த ஆண்டு முழு உரையையும் வாசிக்கவில்லை. அதை கண்டித்துதான் தி.மு.க., உடனடியாக போராட்டம் நடத்தியது.
பழனிசாமி: அ.தி.மு.க., போராட்டம் நடத்தினால் வழக்கு, கைது என நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆளும் தி.மு.க., வின் போராட்டத்திற்கு, உடனே அனுமதி கிடைக்கிறது. அ.தி.மு.க., பொதுக்கூட்டங்களுக்கு கூட நீதிமன்றம் சென்று அனுமதி பெற வேண்டியிருக்கிறது.
முதல்வர்: அ.தி.மு.க., ஆட்சி நடந்தபோது, போராட்டங்கள் நடத்த நீதிமன்றம் சென்றுதான் தி.மு.க., அனுமதி பெற்றது.
பழனிசாமி: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'நீட்' தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் என வாக்குறுதி அளித்தீர்கள். அதை எப்போது நிறைவேற்றுவீர்கள்?
முதல்வர்: 'இண்டி' கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்திருப்போம். எங்கள் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுலும் ஏற்றுக் கொண்டார்.
பழனிசாமி: 2010ல் மத்தியில் தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான், நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. அப்படியிருக்கும்போது, மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை எப்படி ரத்து செய்வர்?
முதல்வர்: இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரையும், ஜெயலலிதா முதல்வராக இருந்த வரையும், நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை.
பழனிசாமி: இண்டி கூட்டணியில் இருந்து கொண்டு, பா.ஜ., தலைவரை அழைத்து வந்து, கருணாநிதி நாணயம் வெளியிட்டு விழாவை நடத்தினீர்கள். கட்சி விழாவுக்கு ஏன் பா.ஜ., தலைவரை அழைத்தீர்கள்?
முதல்வர்: அது அரசு விழா. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்ததில் எந்த தவறும் இல்லை. ஜனாதிபதியை அழைத்தோம்; அவரால் வர முடியவில்லை. பிரதமர் மோடியை அழைத்தோம். அவர்தான் ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்தார்.
பழனிசாமி: கனிம வளங்களை தங்கள் விருப்பம்போல குத்தகை விடும் முறை இருந்தது. இதை மாற்றி ஏலம் விடும் முறையை, 2023ல் மத்திய அரசு கொண்டு வந்தது.
அதை ஆதரித்துதான் ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசினார். ஆனால், இந்த விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை, முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல்வர்: மாநில அரசுக்கு இருந்த உரிமைகளை பறிக்கும் கனிமவள திருத்த சட்டத்தை, அ.தி.மு.க., ஆதரித்ததால்தான், இப்போது டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் நிலை வந்திருக்கிறது. அந்த சட்டத்தை ஆதரித்து, தம்பிதுரை பேசியது உண்மைதான்.
பழனிசாமி: கடந்த 44 மாத தி.மு.க., ஆட்சியில் அரிசி, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், துவரம் பருப்பு, வெள்ளைப் பூண்டு, உளுத்தம் பருப்பு என, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு என்பது கனவாகி விட்டது.
அமைச்சர் வேலு: விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம். ஜி.எஸ்.டி., வரி உயர உயர விலைவாசி உயர்கிறது. வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.
பழனிசாமி: பெஞ்சல் புயல் எச்சரிக்கை வந்த உடனேயே, தி.மு.க., அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை குறைத்துஇருக்கலாம்.
வேலு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால்தான் உயிரிழப்பு இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருப்பர்.
பழனிசாமி: சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படாததால், தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
அமைச்சர் நேரு: கொசஸ்தலை ஆறு திட்டம் தவிர, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 15 முதல் 18 செ.மீ., வரை மழை பெய்தால் தண்ணீர் உடனே வடிந்து விடும். அதற்கு மேல் மழை பெய்தால், 10, 12 மணி நேரம் தண்ணீர் தேங்கிதான் வடியும். அதுதான் இயற்கை.
பழனிசாமி: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அரசின் வருவாயும், மத்திய அரசின் வருவாய் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. ஆனால், வருவாய், நிதி பற்றாக்குறை அதிகரித்து உள்ளது.
தங்கம் தென்னரசு: தமிழக அரசின் பட்ஜெட் அளவு, 4 லட்சம் கோடி ரூபாய். மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாய் மதிப்பும் அதிகரித்துள்ளது. மத்திய நிதி ஆணையம் நிர்ணயித்த வரம்புக்குள் தான் தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது.
திருப்பி செலுத்தும் திறனுள்ள அரசு என்பதால் தான், தமிழகத்திற்கு கடன் கொடுக்கின்றனர்.
கடனை திருப்பி செலுத்தும் திறனுள்ள, சிறந்த நிதி நிர்வாகம் கொண்ட அரசு தி.மு.க., அரசு.
பழனிசாமி: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, 'யார் அந்த சார்?' என்ற, 'பேட்ஜ்' அணிந்து வந்தோம். அதை முதல்வர் விமர்சித்துள்ளார். தி.மு.க., ஆட்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
முதல்வர்: அந்த விவகாரத்தில் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டு, மறுநாளே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.