ADDED : ஜன 31, 2024 02:12 AM

சென்னை,:சாட்சியம் அளிக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மாஸ்டர் கோர்ட்டில் நேற்று ஆஜராகவில்லை.
கோடநாடு கொலை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்ட டில்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆகியோருக்கு எதிராக, 1.10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்கள் பதிவுக்காக, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் 'பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, நேரில் ஆஜராக இயலாது. என் வீட்டில் சாட்சியம் பதிவு செய்ய, அட்வகேட் கமிஷனரை நியமிக்க வேண்டும்' என கூறியிருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அட்வகேட் கமிஷனரை நியமித்து, ஒரு மாதத்தில் சாட்சியங்களை பதிவு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து, மேத்யூ சாமுவேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு, ஜனவரி 30, 31ல் மாஸ்டர் கோர்ட்டில் பழனிசாமி ஆஜராகி சாட்சியம் அளிக்க அறிவுறுத்தியது.
அதன்படி, நேற்று பழனிசாமி ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாஸ்டர் கோர்ட்டில், வழக்கு பட்டியலிடப்படவில்லை. சாட்சியம் அளிக்க பழனிசாமியும் வரவில்லை. பெருமாளை தரிசிக்க திருப்பதி சென்றிருப்பதாக, அவரது கட்சியினர் தெரிவித்தனர்.