தி.மு.க., கூட்டணியில் விரிசலை எதிர்பார்க்கிறார் பழனிசாமி நாகையில் உதயநிதி பேச்சு
தி.மு.க., கூட்டணியில் விரிசலை எதிர்பார்க்கிறார் பழனிசாமி நாகையில் உதயநிதி பேச்சு
ADDED : நவ 25, 2024 07:46 AM

நாகப்பட்டினம் : தமிழகத்தில் கொள்கை ரீதியான தி.மு.க., கூட்டணியில் விரிசல் விழாதா என, பழனிசாமி காத்துக்கிடக்கிறார் என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
நாகையில், தி.மு.க., பிரமுகர் மனோகரன் இல்ல திருமண விழாவில் அவர் பேசியதாவது:
தமிழ் பண்பாட்டின் அடையாளமாக நடக்கும் சுயமரியாதை திருமணத்தில் அனைவரும் தமிழில் மணமக்களை வாழ்த்துகிறோம். மந்திரங்கள் கிடையாது. இந்த சுயமரியாதை திருமணத்திற்கு 1967 ம் ஆண்டில் அண்ணாதுரை தான் சட்டம் இயற்றினார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பல மாநிலங்கள் பின்பற்றுகிறது. இதையெல்லாம பார்க்கும் போது எதிர்கட்சியினருக்கு பொறாமை ஏற்படுகிறது.
குறிப்பாக அ.திமு.க., பழனிச்சாமிக்கு அதிகமான வயிற்றெரிச்சல். காலமெல்லாம் தமிழகத்திற்கு உழைத்த கருணாநிதி பெயரை ஏன் திட்டங்களுக்கு வைக்கிறீர்கள் என்கிறார். அதனால்தான் எப்படியாவது நம் கூட்டணி உடையாதா, எதாவது விரிசல் விழாதா, என காத்துக்கிடக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க, வை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், கட்சி கூட்டத்தில் பேசும்போது, கூட்டணிக்கு கூப்பிட்டா ஒருத்தன் 200 கோடி கேட்கிறான், 20 சீட் கேட்கிறான் என்கிறார். அவர்கள் கூட்டணி பேரம் பேசும் கூட்டணி. நமது கூட்டணி கொள்கை கூட்டணி. 2026 சட்டசபை தேர்தல் மிக முக்கியமான தேர்தல். 200 தொகுதியை நோக்கி நமது பயணம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.