தமிழகம் திவாலாக பழனிசாமி எதிர்பார்ப்பு *சிவகங்கை விழாவில் ஸ்டாலின் கொந்தளிப்பு
தமிழகம் திவாலாக பழனிசாமி எதிர்பார்ப்பு *சிவகங்கை விழாவில் ஸ்டாலின் கொந்தளிப்பு
ADDED : ஜன 22, 2025 07:09 PM

சிவகங்கை,:‛‛பொய், அவதுாறால் இந்த ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முயற்சித்து வருகிறார்,'' என, சிவகங்கையில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது:
ஒவ்வொரு பகுதி, மனிதரை நாடி சென்று உதவுவது தான் இந்த அரசின் நோக்கம். ‛எல்லாருக்கும் எல்லாம்' என, பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்துகிறோம். சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமே மகளிர் உரிமை தொகை 2 லட்சத்து 38 ஆயிரத்து 438 பேருக்கு வழங்கியுள்ளோம். வங்கி கணக்கில் பணம் வந்ததும், அனைத்து பெண்களும், எங்கள் அண்ணன் ஸ்டாலின் தாய்வீட்டு சீதனம் என்றும், கல்லுாரி மாணவியர் மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 பெற்று எங்கள் அப்பாவாக இருந்து ஸ்டாலின் தருகிறார் என்றும் பெருமை கொள்கின்றனர்.
புதுமை பெண் திட்டத்தில் 7210 மாணவிகள், தமிழ்புதல்வன் திட்டத்தில் 6076 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். காலை உணவு திட்டம் மூலம் 37,000 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். பல்வேறு திட்டம் மூலம் 8 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து மக்களுக்காக செய்து வருவதை தாங்கி கொள்ள முடியாத அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என எரிச்சலுடன் புலம்பி தவிக்கிறார். திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வெட்டி பேச்சு பேசுவதுபோல வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சி தலைவர் உளறுகிறார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதி அளித்திருந்தோம். அதில், 389யை செயல்படுத்தி விட்டோம். மீதம் இருப்பதையும் விரைவில் நிறைவேற்றுவோம். இதை தெரிந்தும் தெரியாதது போல் பழனிசாமி பேசுகிறார். அவர் என்ன செய்வார் பாவம். அவர் இன்னொரு கட்சி தலைவர் வெளியிடும் அறிக்கையை அப்படியே, ‛காப்பி பேஸ்ட்' செய்து வெளியிடுகிறார்.
கடந்த 2011 தி.மு.க., ஆட்சியில் உபரி வருமானம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. 2013ம் ஆண்டு முதல் தமிழகத்தை பற்றாக்குறை மாநிலமாக அ.தி.மு.க., ஆட்சியில் மாற்றினர். இப்படி இருந்த தமிழகத்தை நாங்கள் தான் மீட்டோம்.
இந்நிலையிலும், மத்திய அரசின் திட்டங்களுக்கும், மாநில அரசின் நிதியை தான் செலவிடுகிறோம். தமிழகம் திவாலாகி விட்டது என அறைகூவல் விடுக்கிறார். அவரை பொறுத்தவரை தமிழ்நாடு திவாலாக வேண்டும். அதுதான் அவருடைய எதிர்பார்ப்பு.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிற்கும் தி.மு.க., அரசின் திட்டங்கள் சென்று கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.