தேர்தல் கமிஷன் விசாரணையை முடிக்க கோரி பழனிசாமி வழக்கு
தேர்தல் கமிஷன் விசாரணையை முடிக்க கோரி பழனிசாமி வழக்கு
ADDED : ஏப் 03, 2025 10:12 PM
சென்னை:'அ.தி.மு.க., சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷனில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது, விசாரணையை நடத்தி முடிக்க, உரிய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமியை தேர்ந்தெடுத்தது; கட்சி விதிகளில் திருத்தம் செய்தது தொடர்பாக, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், முன்னாள் எம்.எல்.ஏ., கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர், தேர்தல் கமிஷனில் புகார் மனு அளித்தனர். அவற்றின் மீது, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த, தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு தடை விதித்தது. தடையை நீக்கக் கோரி, ரவீந்திரநாத் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், தடையை நீக்கி உத்தரவிட்டது. 'தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, ஒரு அரசியல் கட்சியில், இரு வேறு பிரிவுகள் இருந்தால், எந்தப் பிரிவு உண்மையான கட்சி என்பது குறித்து விசாரிக்க, தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து விசாரிக்கலாம்' என, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், பழனிசாமி புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,'அடுத்த ஆண்டு நடக்க உள்ள, சட்டசபை தேர்தலுக்கு, தயாராக வேண்டி உள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுபடி, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி முடிக்க, உரிய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.