பழனிசாமியை அவர் கட்சியினரே பழிவாங்குகின்றனர்: ரகுபதி
பழனிசாமியை அவர் கட்சியினரே பழிவாங்குகின்றனர்: ரகுபதி
ADDED : அக் 26, 2024 07:01 PM
புதுக்கோட்டை:'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை அவருடைய கட்சியினரே பழிவாங்கி வருகின்றனர்,'' என அமைச்சர் ரகுபதி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழ் தாய் வாழ்த்தை எங்களை விட வேறு யாரும் மதித்து விட முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல், எந்த அரசு நிகழ்ச்சியையும் தொடங்குவதில்லை. தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்தில், கவர்னர் தான் சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளார். அவர் சர்ச்சை ஆக்காமல் இருந்திருந்தால், இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டு இருக்காது. நேற்று முன்தினம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியதில் ஏற்பட்ட குளறுபடி, 'மைக்' பிரச்னையால் ஏற்பட்டது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது, யாரும் வழக்குப்போட்டு பழிவாங்க வேண்டியதில்லை. அவருடைய கட்சியினரே அவரை பழிவாங்கி வருகின்றனர். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் நேற்று முன்தினம் ஒற்றை ஆளாக போராடியுள்ளார்; ஆழ்ந்த அனுதாபங்கள்.
தி.மு.க., கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை. பிரச்னையை உருவாக்க பத்திரிகையாளர்கள் முயற்சிக்கின்றனர்; அது நடக்காது. எங்கள் கூட்டணி 'கான்கிரீட்' வலிமையுடன் உள்ளது. எதை வைத்து உடைத்தாலும், உடைக்க முடியாது.
புழல் சிறையில் 2,000 கைதிகள் வரை தான் இருக்கலாம்; ஆனால், தற்போது, 3,000 கைதிகள் உள்ளனர். அதனால், தமிழக முதல்வர் புழல் சிறையில் ஆயிரம் கைதிகள் தங்கக் கூடிய அளவில், கூடுதல் சிறை கட்டடத்தை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். விரைவில், புதிய கட்டடம் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.