காற்றோடு கத்தி சண்டை போடுகிறார் பழனிசாமி * அமைச்சர் நேரு கிண்டல்
காற்றோடு கத்தி சண்டை போடுகிறார் பழனிசாமி * அமைச்சர் நேரு கிண்டல்
ADDED : டிச 17, 2024 07:35 PM
சென்னை:'பயந்தாங்கொள்ளி பழனிசாமி, அ.தி.மு.க., பொதுக்குழுவில் வீராவேசமாகப் பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார்' என, அமைச்சர் கே.என்.நேரு விடுத்திருக்கும் அறிக்கைக்கு பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அறிக்கை விடுத்துள்ளார்.
நேரு அறிக்கை:
பா.ஜ.,வோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க., அதை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தி.மு.க., அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு கண்டனம் என்றும், பிரதமர் மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் வலியுறுத்தல் என்றும் சொல்லி, கோழைசாமி பா.ஜ., பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பழனிசாமிக்கு மோடி என்றால் பயம்; அமித் ஷா என்றால் பயம். அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித் துறை, கவர்னர், ரெய்டு, சின்னம் என, எல்லாவற்றிற்கும் பயம்.
இப்படி பழனிசாமியின் 'பய'ப்பட்டியல், 'எல்லாம் பயம்மயம்' என, சீனப்பெருஞ்சுவர் போல் நீள்கிறது. புலிப்பாண்டியென அழுத்தம் கொடுக்கும் பழனிசாமி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க., ஆதரித்து ஓட்டளிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா ராஜ்யசபாவில் தோல்வி அடைந்திருக்கும்.
பார்லிமென்டில், சுரங்கம் மற்றும் கனிமவளம் திருத்த மசோதாவுக்கு அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை ஆதரவளித்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுக ஆதரவு வழங்கினார்.
ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 'உதய்' மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்கு பயந்து ஆதரவு; முத்தலாக் தடை சட்டத்திற்கு லோக்சபாவில் ஆதரவு, ராஜ்யசபாவில் எதிர்ப்பு என, அ.தி.மு.க., இரட்டை வேடம் போட்டது.
மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிராக, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பா.ஜ.,வின் உன்னத தோழன் அ.தி.மு.க., இப்படி மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும், திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழை தான் பழனிசாமி.
இந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி தான், அ.தி.மு.க., பொதுக்குழுவில் வீராவேசமாகப் பேசுவது போல் காற்றோடு கத்தி சண்டை போட்டுள்ளார். பெட்ரோல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு என, மத்திய அரசை கண்டித்து என்றைக்காவது பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறாரா?
அத்தனை பேரும் எதிர்பார்க்கிற கூட்டணி அமையும். 2026ல் அ.தி.மு.க., மீண்டும் அரியணை ஏறும் என்றல்லாம், பொதுக்குழுவில் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார். கோழைக்கு ஆசை என்ன என்று தான் கேட்க தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.