மோடி அரசின் கடன் குறித்து பழனிசாமி வாய் திறக்கவில்லை: தங்கம் தென்னரசு
மோடி அரசின் கடன் குறித்து பழனிசாமி வாய் திறக்கவில்லை: தங்கம் தென்னரசு
ADDED : பிப் 20, 2024 01:31 AM
சென்னை:தமிழக அரசின் பட்ஜெட் குறித்து பேட்டி அளித்த, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி,'இது கனவு பட்ஜெட். மக்களுக்கு பலன் தராது. தி.மு.க., அரசு, 8.33 லட்சம் கோடி ரூபாய் கடன் உருவாக்கி உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாக, தமிழக அரசு உள்ளது' எனக் கூறி இருந்தார்.
அதற்கு பதில் அளித்து தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க., 2011 சட்டசபை தேர்தல் அறிக்கையில், '1 லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்ற தலைக்குனிவில் இருந்து, தமிழகத்தை மீட்டு, தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும், வழிவகை செய்யப்படும்' என, வாக்குறுதி அளித்திருந்தது.
அந்த தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. கடன் சுமையை போக்குவதற்கு பதிலாக, ஒவ்வொரு தமிழர் தலையிலும் கடனை ஏற்றியதுதான் சாதனை.
தி.மு.க., அரசின் கடன் குறித்து கவலைப்படும் பழனிசாமி, மோடி அரசின் கடன் குறித்து வாய் திறக்கவில்லை. கடனை அடைக்க, வருவாயை பெருக்கும் வழியை, அரசு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமான கடனை அடைக்கும் வழிகளை, அரசு இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும்.
தி.மு.க., அரசின் பட்ஜெட் மக்களுக்கு பயன் தராது என சொல்லி இருக்கிறார். அது பயன் தரும் என லோக்சபா தேர்தலில், மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவர். கடந்த காலங்களில், அ.தி.மு.க., பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எல்லாம், பழனிசாமி மறந்து விட வேண்டாம்.
இவ்வாறு, தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

