விவசாயிகளின் ஓட்டுகளை பெற பொய் சொல்கிறார் பழனிசாமி
விவசாயிகளின் ஓட்டுகளை பெற பொய் சொல்கிறார் பழனிசாமி
ADDED : அக் 24, 2025 12:21 AM
சென்னை: ''நெல் கொள்முதல் நடக்கவில்லை என எந்த இடத்திலும் விவசாயிகள் புகார் தெரிவிக்கவில்லை. விவசாயிகளின் ஓட்டுகளை அறுவடை செய்ய பழனிசாமி பொய் சொல்கிறார்,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
தஞ்சையில்அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., அரசு எப்போதும் விவசாயிகளுக்கு துணை நிற்கிறது. இதை பொறுக்க முடியாமல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பல தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு எடுத்து செல்லாததால், புதிய நெல் மூட்டைகள் வைக்க இடம் இல்லை என தவறாக குற்றம் சாட்டியுள்ளார்.
இடவசதி வழக்கமாக குறுவை சாகுபடி காலத்தில், அக்., 1ம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஆனால், தி.மு.க., ஆட்சியில், கடந்த ஆண்டிலிருந்து செப்., 1ம் தேதியே திறக்கப்படுகிறது.
செப்.,1 முதல், நேற்று முன்தினம் வரை, 50 நாட்களில், 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை, 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
அதில், 8 லட்சம் டன் அதாவது, 81 சதவீத நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மீதமுள்ள, 1.93 லட்சம் டன் நெல்லை, கிடங்குக ளுக்கு எடுத்து செல்லும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும், 10 நாட்களுக்குள் இந்த பணிகள் முடியும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 2 லட்சம் டன் நெல்லை இருப்பு வைக்க, இடவசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் தென்னமநாடு, ஒக்கநாடு, கீழையூர் கொள்முதல் நிலையங்களில், தினமும் 3,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
குற்றச்சாட்டு ஒரத்தநாடு, புதுார், திருவையாறு, விளங்குடி கொள்முதல் நிலையங்களில், தினமும் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
ஆனால், தினமும், 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக, பழனிசாமி தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கூடுதலாக நெல் வந்தால் கொள்முதல் செய்ய, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதனால் தான், நெல் கொள்முதல் செய்யவில்லை என எந்த இடத்திலும் விவசாயிகள் இதுவரை புகார் மனு அளிக்கவில்லை.
பழனிசாமி மட்டும் தான் தொடர்ந்து பொய் புகார் கூறி வருகிறார். நெல் முளைத்து விட்டதாக பழனிசாமியிடம் கூறிய பெண்மணி, குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கர் வயலில் இதுவரை அறுவடையே செய்யவில்லை.
கடந்த ஆண்டு குறுவை சாகுபடி காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் 1.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 2.50 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் பழனிசாமி பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். பொய்யை விதைத்து, விவசாயிகளின் ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என திட்டமிடுகிறார். அவரது எண்ணம் தஞ்சை மண்ணில் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசை
காப்பாற்ற முயற்சி
'செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, கடந்த ஜூலையில் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கியது. வழிகாட்டுதல் வேறு; ஒப்புதல் வேறு. இன்று வரை செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. பா.ஜ., அரசை காப்பாற்ற பழனிசாமி புகார் தெரிவித்து வருகிறார்' என்றும் உதயநிதி மேலும் கூறினார்.

