UPDATED : நவ 19, 2025 02:24 PM
ADDED : நவ 19, 2025 03:46 AM

சென்னை: கோவை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்தார்.
கோவை கொடிசியா அரங்கில் நடந்த இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்தார். கோவை வந்த மோடியை, விமான நிலையத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சமீபத்தில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 'பீஹார் வெற்றியால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் பா.ஜ., தொண்டர்களுக்கு புது சக்தி கிடைத்துள்ளது.
பா.ஜ., தொண்டர்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை; அவர்கள் மனது வைத்தால் எதையும் சாதிப்பர்' என்றார்.
பீஹாரை தொடர்ந்து தமிழகம், மேற்கு வங்கத்தில், பா.ஜ., தலைமை கவனம் செலுத்த துவங்கியுள்ளது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி வைத்ததால், பீஹாரில் வெற்றி கிடைத்துள்ளது.எனவே, இதே மாடலில், தமிழகத்திலும் கூட்டணி அமைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
திருமாவளவனின் வி.சி., தவிர, டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் நடத்தும் கட்சிகள் என, பட்டியலின கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இன்று கோவை வந்த பிரதமர் மோடியை, தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பழனிசாமி சந்தித்து பேசினார்.
கோவை சந்திப்புக்குப் பின், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

