sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும்படி மா.செ.க்களுக்கு பழனிசாமி உத்தரவு!

/

சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும்படி மா.செ.க்களுக்கு பழனிசாமி உத்தரவு!

சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும்படி மா.செ.க்களுக்கு பழனிசாமி உத்தரவு!

சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும்படி மா.செ.க்களுக்கு பழனிசாமி உத்தரவு!

10


UPDATED : செப் 02, 2024 10:59 AM

ADDED : செப் 01, 2024 11:54 PM

Google News

UPDATED : செப் 02, 2024 10:59 AM ADDED : செப் 01, 2024 11:54 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு, அ.தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இழந்துள்ள ஓட்டு வங்கியை மீட்டெடுக்க, அடிமட்ட அளவில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிய, மாவட்டந்தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தி உள்ளார். அதேநேரத்தில், ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுகளை தக்கவைக்கவும், விஜய் கட்சி வளர்வதை தடுக்கவும், அவரை, 'அட்டாக்' செய்து பேசவும், அ.தி.மு.க.,வினருக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா காலத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கிய அ.தி.மு.க.,வுக்கு, 44 சதவீதம் ஓட்டுகள் இருந்தன. இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், அந்த ஓட்டு வங்கி, 20.46 சதவீதமாக குறைந்துள்ளது.

பாதிக்கும் மேலான ஆதரவு பலத்தை அக்கட்சி இழந்துள்ளது. அந்த சரிவில் இருந்து கட்சியை மீட்டெடுத்தால் தான், சட்டசபை தேர்தலை சந்திக்க முடியும் என்ற நிலையில் அ.தி.மு.க., உள்ளது.

இதற்காகவே, லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்கான தொடர் கூட்டங்களை, தொகுதி வாரியாக பழனிசாமி நடத்தினார்.

அந்த கூட்டங்களில், எந்தெந்த வகைகளில் கட்சி பலம் இழக்க நேரிட்டது என்ற விபரங்கள், மாவட்ட செயலர்களாலும், தேர்தல் பொறுப்பாளர்களாலும் முன்வைக்கப்பட்டன.

அவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து, கட்சியில் அடிமட்ட அளவில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளை அடைக்கும் வேலையை இப்போது பழனிசாமி துவக்கி இருக்கிறார்.

அடிமட்ட நிர்வாகிகளான வட்ட, கிளை செயலர்கள், பகுதி, நகர செயலர்கள், ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேசுமாறு, மொத்தம் உள்ள, 81 மாவட்ட செயலர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மிக முக்கியமாக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அளவிலும் கட்சி முன்னர் பெற்ற ஓட்டுகள்; தற்போது வாங்கிய ஓட்டுகள்; இழந்த ஓட்டுகள்; அதற்கான காரணங்கள் குறித்து அறியும்படி கூறியிருக்கிறார்.

அதன் அடிப்படையில், ஓட்டுச்சாவடி அளவில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளை அடைத்து, இழந்த ஓட்டுகளை மீட்டெடுக்க திட்டமிட்டே, இந்த கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார் பழனிசாமி.

அவரது உத்தரவுப்படி, முதல் செயல் வீரர்கள் கூட்டம், சென்னை புறநகர் மாவட்ட செயலர் கே.பி.கந்தன் தலைமையில், கொளப்பாக்கத்தில் நேற்று மாலை நடந்தது. அந்த மாவட்டத்தை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

அதில் விவாதிக்கப்படும் விஷயங்களை கண்காணிக்கவும், தலைமையின் அறிவுறுத்தல்களை விளக்கவும், மேலிட பார்வையாளர்களாக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் பரமசிவம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகுமாறு, கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்குமுன் ஓட்டுச்சாவடி அளவில் கட்சியின் செல்வாக்கை மீட்டெடுக்க, என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, கீழ்மட்ட நிர்வாகிகளிடம் கருத்தும் கேட்கப்பட்டது.

பழனிசாமி கையெழுத்துடன் கூடிய புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்ட பின்னர், கட்சி தேர்தல் நடத்தப்படும்; அதனால், பொறுப்பில் உள்ள ஒவ்வொருவரும் இப்போதே களத்தில் இறங்கி கட்சி வேலைகளை பார்க்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2026 சட்டசபை தேர்தலுக்கு வியூகம் வகுத்து தரும் பொறுப்பை, பிரசாந்த் கிஷோரிடம் பணியாற்றிய ஒருவரிடம் ஒப்படைக்க, பழனிசாமி பேச்சு நடத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், மாவட்ட செயலர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், மீண்டும் சேர கடிதம் கொடுத்துள்ளனர். அவர்களை சேர்க்க, மாவட்ட செயலர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர். அதனால், அவர்கள் விஜய் கட்சியில் இணைய பேச்சு நடத்துகின்றனர்.

இதை தடுப்பதற்காகவும், விஜய் கட்சி எந்த விதத்திலும் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர்களையும் அழைத்து பேசி, நீக்கப்பட்டவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், தி.மு.க.,வை எதிர்க்கக் கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க., என்பதையும், ஆளுங்கட்சிக்கு மாற்று எப்போதுமே அ.தி.மு.க., தான் என்ற நிலையையும் இழந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பழனிசாமி, விஜய் கட்சியை கடுமையாக விமர்சித்து அரசியல் செய்யுமாறு, கட்சியினருக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

அதை வெளிப்படுத்தும் விதமாகதான், முன்னாள் அமைச்சர் ஒருவர், 'விஜய் கட்சியெல்லாம் போணியாகாது. கமல் கட்சி போல தான் இருக்கும்' என்றார்.

'டிவி' விவாதங்களில் பங்கேற்கும், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் ஒருவர், அரசியல் கட்சி துவக்கி தோல்வி அடைந்த நடிகர்களான சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர் வரிசையில் விஜயை குறிப்பிட்டுள்ளார்.

த.வெ.க., கை வைக்கப்போவது யார் பையில்?

சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், யாருடைய ஓட்டுகளை பிரிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளதால், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் குழப்பத்தில் உள்ளன. தி.மு.க., தரப்பில், தமிழக உளவுத்துறை வாயிலாக சமீபத்தில் சர்வே ஒன்றை நடத்தி அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதில், நடிகர் விஜய் 8 - 10 சதவீத ஓட்டுகளை பெறலாம் என்று சொல்லப்பட்டு உள்ளது. அந்த ஓட்டுக்கள் அனைத்தும், தி.மு.க.,வுக்கும், அரசுக்கும் எதிரான ஓட்டுகள் என்றே கூறப்பட்டுள்ளது. இதை அறிந்ததும், தி.மு.க., தரப்புக்கு இருந்த கவலை போய் விட்டது.
அ.தி.மு.க., தலைமையோ, இந்தக் கருத்தை ஏற்க மறுக்கிறது. ஆளுங் கட்சி ஆதரவு ஓட்டுகளை, இதுவரை எந்த கட்சியாலும் பிரிக்க முடியாத நிலை இருந்தது. அரசியலுக்கு புதிய முகமாக விஜய் வருவதால், தி.மு.க., மற்றும் அரசுக்கு ஆதரவான ஓட்டுகளையே அவர் பிரிப்பார் என்று அக்கட்சி கருதுகிறது.
ஆளும் தி.மு.க.,வின் கொள்கைகளையே அப்படியே பிரதிபலிக்கும் விதமாக, விஜய் கட்சியின் அரசியல் அணுகுமுறைகள் உள்ளன. அதையொட்டியே அவரது அரசியல் பயணமும் இருக்கும் என்பதால், ஆளுங்கட்சியின் ஆதரவு ஓட்டுகளையே, விஜய் கணிசமாக பிரிக்கக்கூடும் என்றே அரசியல் வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது.
இது நடக்கும்பட்சத்தில், ஆளும் கூட்டணி பலம் இழக்கும். அந்த நேரத்தில், ஆளுங்கட்சியின் எதிர்ப்பு ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்து விட்டால், ஆட்சி வசப்படும் என்பது பழனிசாமியின் கணக்கு. விஜய்க்கு எதிராக அரசியல் செய்வதன் வாயிலாகவே, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை மடைமாற்ற முடியும் என திட்டமிடும் பழனிசாமி, அவருக்கு எதிராக திரும்புமாறு, தன் கட்சியினருக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறார். தி.மு.க.,வை எப்படி கடுமையாக விமர்சிக்கிறோமோ, அதற்கு சற்றும் குறையாமல் விஜயை விமர்சிக்குமாறு, கட்சியினரை உசுப்பி விட்டுள்ளார்.
விஜயோடு இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்கலாமா என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், துவக்கத்தில் ஆசைப்பட்டார். அவரோடு கூட்டு வைத்தால், தன் கட்சி கரைந்து விடும் என்பதால், அந்த ஆசையை துறந்து விட்டார். விஜய் பக்கம் யாரும் போகாமல் இருக்கவும், தன் ஆதரவு ஓட்டுகளை தக்கவைக்கவும், தனித்து போட்டி என்று அறிவித்து விட்டார்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us