கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை போராட்டம்; இ.பி.எஸ். திட்டவட்டம்
கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை போராட்டம்; இ.பி.எஸ். திட்டவட்டம்
ADDED : மார் 03, 2024 11:16 PM

சென்னை, 'போதைப் பொருள் மாபியா கும்பல் முழுமையாக கைது செய்யப்பட்டு, தமிழகத்தில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்.தெரிவித்து உள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
தி.மு.க., அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஜாபர் சாதிக், சர்வதேச அளவில் போதைப் பொருள் மாபியாவாக வளர்ந்து, இன்று உலகம் முழுதும் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.
விழிப்புணர்வு
இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சீரழிக்கும், போதைப் பொருள் புழக்கம் குறித்து, நான் மட்டும் தான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொடர்ந்து பேசி வருகிறேன். தி.மு.க.,வை எச்சரித்தும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பேசி வருகிறேன்.
இது, நம் அனைவருடைய வாழ்வியலை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் விஷயம். இதில், அதிகம் பாதிக்கப்படுவது நம் குழந்தைகளான, பள்ளி, கல்லுாரி மாணவியரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும், இந்த தலைமுறை இளைஞர்களும் தான்.
ஒரு பெற்றோராக, நாம் இந்த பிரச்னை குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். நமது முதல் மற்றும் முக்கியமான கடமை, நம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவது தான்.
ஆளும் தி.மு.க., நிர்வாகி, ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர், போதைப் பொருள் மாபியா தலைவராக இருக்கிறார். இது, தமிழகத்தை அதல பாதாளத்துக்கு அழைத்து செல்கிறது.
காப்பாற்ற முடியாது
நேற்றுமுன்தினம் ஒரே நாளில், காலை மதுரையில் போதைப் பொருள் பறிமுதல்; மதியம் உளுந்துார்பேட்டையில் பள்ளி மாணவர்களுக்கான இனிப்புடன் கலந்திருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்; மாலை சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டிருந்த போதைப் பொருள் பறிமுதல் என மொத்தம், 150 கோடி ரூபாய் அளவிற்கு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
நாம் வாழ்வது தமிழகமாக அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனை கிடங்கா என்ற கேள்வி எழுகிறது.
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்து, சர்வதேச போதைப் பொருள் மாபியாவுக்கு கருவியாக இருக்கும் தி.மு.க., ஆட்சி இனியும் தொடர்ந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். அத்துடன் இது நிற்கப் போவதில்லை.
போதைப் பொருள் மாபியாக கும்பல் முழுமையாக கைது செய்யப்பட்டு, தமிழகத்தில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

