ADDED : மார் 27, 2025 11:10 PM
சென்னை:'இருமொழிக் கொள்கை குறித்து, உள்துறை அமைச்சரிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அடுத்த முறை டில்லி செல்லும்போது, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது:
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானத்தை, பா.ஜ.,வை தவிர, அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் மனதார வரவேற்றுள்ளது. அவர்களுக்கு என் நன்றி.
அதேநேரத்தில், அ.தி.மு.க.,வுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்.
நேற்று முன்தினம், இருமொழிக் கொள்கை குறித்து நான் பேசும்போது, 'எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி டில்லிக்கு சென்றிருக்கிறார்; அவர் யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தி கிடைத்துள்ளது' என்று கூறினேன்.
டில்லி சென்ற பழனிசாமியிடம், இது தொடர்பான கேள்வியை, பத்திரிகையாளர்கள் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், 'நான் யாரையும் சந்திக்க வரவில்லை; புதிதாக திறக்கப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை பார்க்க வந்தேன்' என்று கூறியுள்ளார். மாலையில், உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார்.
சந்திக்கட்டும்; தவறு என்று சொல்லவில்லை. இருமொழிக் கொள்கை குறித்து, அவரிடம் பேசியதாகக் கூறியுள்ளார். அவருக்கு, தி.மு.க., சார்பில் பாராட்டுகள்.
அடுத்த முறை டில்லி செல்லும்போது, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறுவது குறித்தும், அமித் ஷாவிடம் அவர் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

