முறையான வழியில் முயற்சித்தால் சிகரத்தை அடையலாம் பாரிவேந்தரை உதாரணம் காட்டி பழனிசாமி பாராட்டு
முறையான வழியில் முயற்சித்தால் சிகரத்தை அடையலாம் பாரிவேந்தரை உதாரணம் காட்டி பழனிசாமி பாராட்டு
ADDED : ஆக 24, 2025 12:50 AM

சென்னை:''முறையான வழியில் முயற்சி செய்தால் சிகரத்தை அடையலாம் என்பதற்கு, எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் பாரிவேந்தர் மிகச்சிறந்த உதாரணம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தரின், 86வது பிறந்த நாள் விழா, சென்னையை அடுத்து, காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
சேலம் மாவட்டம் தாண்டவராயபுரம் கிராமத்தில், ஏழ்மையான கிராமத்தில் பிறந்தவர் பாரிவேந்தர். கடும் உழைப்பால், வாழ்வில் தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியவர். தெளிவான குறிக்கோளுடன் திட்டமிட்டு ஆற்றிய பணிகளால், இன்று உலகம் போற்றும் அளவுக்கு உச்சம் தொட்டவர்.
பெரும் வளர்ச்சி அரசு தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களை வெற்றி பெறச் செய்ய, தனி பயிற்சி நிலையத்தையும், நைட்டிங்கேல் பள்ளியையும் துவக்கினார். இப்படி கல்வித் துறையில் நுழைந்த அவர், வள்ளியம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி, வள்ளியம்மாள் பொறியியல் கல்லுாரி, எஸ்.ஆர்.எம்., பல்கலை என, பல்வேறு கல்வி நிறுவனங்களை துவங்கினார்.
எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனங்களில், உலகத் தரத்தில் உயர் கல்வி தரப்படுவதால், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், இங்கு விரும்பி வந்து கல்வி கற்கின்றனர். இங்கு இல்லாத துறைகளே இல்லை என்கிற அளவுக்கு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. வெளி மாநிலங்களிலும் எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனங்கள், சிறப்பான சேவையை வழங்கி வருகின்றன.
கல்வி சேவையை தொடர்ந்து, மருத்துவ சேவையையும் வழங்கி வருகிறார். பாரிவேந்தரின் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு, இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ சிகிச்சைக்காக யாராவது அணுகினால், மறுப்பு சொல்லாமல் உதவி வருகிறார்.
தமிழ் மீது பெரும் பற்றுடைய பாரிவேந்தர், தமிழ் பேராயம் என்ற அமைப்பை துவங்கி, தமிழ் வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார். தமிழ் படைப்பாளர்கள், ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி வருகிறார்.
கல்வி, மருத்துவ சேவைகள், தமிழ் பணிகளோடு, சமூக சேவை பணிகளையும் செய்து வருகிறார். அதற்காக, இந்திய ஜனநாயக கட்சியை துவக்கி சிறப்பாக நடத்தி வருகிறார்.
2019ல் பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் வென்று, எம்.பி.,யாக சிறப்பாக செயல்பட்டார்.
பெரம்பலுார் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளிலும், தலா 50 மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறார்.
தெளிவான சிந்தனை நாம் உயிரோடு இருக்கும் வரை, நம்மோடு ஒட்டி இருக்கும் ஒரே செல்வம் கல்வி செல்வம் மட்டுமே.
அப்படிப்பட்ட கல்வி செல்வத்தை, பல லட்சம் பேருக்கு வழங்கி, அவர்களது வாழ்வில் ஒளியேற்றியவர் பாரிவேந்தர். உலகம் போற்றும் பல்கலை வேந்தராக அவர் உருவாக, கடின உழைப்பு, தெளிவான சிந்தனை, தீர்க்கமான முடிவு போன்றவையே காரணம்.
அதனால் தான் எஸ்.ஆர்.எம்., பல்கலை, உலகப் புகழ் பெற்றுள்ளது. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்குள், இதுவரை நான் வந்ததில்லை. உள்ளே நுழைந்தவுடன் பல்கலை அமைப்பே பிரமிப்பாக, சிறப்பாக உள்ளது.
பல்கலைக்குள் நுழைந்தவுடனேயே மாணவர்கள் மனதில் நல்ல எண்ணத்தை, உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
முறையான வழியில் முயற்சி செய்தால், சிகரத்தை அடையலாம் என்பதற்கு, பாரிவேந்தர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. 86வது பிறந்த நாள் காணும் அவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், அன்பழகன், சின்னையா, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, பார்க்கவ குல முன்னேற்ற சங்கத் தலைவர் கோவை தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

