தி.மு.க.,வுக்கு நெருக்கடி தர பழனிசாமி அழுத்தம் : அமித் ஷா பதில்
தி.மு.க.,வுக்கு நெருக்கடி தர பழனிசாமி அழுத்தம் : அமித் ஷா பதில்
UPDATED : செப் 18, 2025 03:15 AM
ADDED : செப் 18, 2025 03:10 AM

சென்னை : 'கடந்த 2021 சட்டசபை தேர்தலில் செய்த தவறையே செய்யாமல், வரும் 2026ல் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லி சென்ற பழனிசாமி நேற்று முன்தினம் இரவு அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன், 30 நிமிடங்கள் தமிழகத்தின் பொதுவான அரசியல் நிலவரங்கள், விஜய் கட்சியின் தாக்கம், கூட்டணியை வலுப்படுத்துவது, பிரசார வியூகம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி அமித் ஷா பேசியுள்ளார்.
'துரைமுருகன், நேரு, பன்னீர்செல்வம் உள்ளிட்ட தி.மு.க., அமைச்சர்கள், பொன்முடி, செந்தில் பாலாஜி போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை சோதனைகளை விரைவுப்படுத்த வேண்டும்; நீதிமன்றங்கள் ஏற்கும் அளவுக்கு வலுவான ஆதாரங்களை திரட்ட வேண்டும்.
2024 லோக்சபா தேர்தலின்போது, ஊழல் வழக்குகளில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சியினருக்கு கொடுத்தது போல நெருக்கடி கொடுக்க வேண்டும்' என, அமித் ஷாவிடம் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட அமித் ஷா, 'சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்; இல்லையெனில், அ.தி.மு.க.,வின் எதிர்காலமே பாதிக்கப்படும். அ.தி.மு.க.,வில் யாரை சேர்ப்பது, நீக்குவது, உங்களின் கட்சி விவகாரம். ஆனால், கட்சி பலமாக இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் என்ற உண்மையையும் மறந்து விடக்கூடாது' என, கூறியுள்ளார்.
'2021 சட்டசபை தேர்தலின்போது, 'தினகரனின் அ.ம.மு.க.,வுக்கு சில தொகுதிகளை விட்டுக் கொடுங்கள்' என்றோம்; தே.மு.தி.க.,வையும் சேர்க்க வலியுறுத்தினோம். ஆனால், விடாப்பிடியாக மறுத்து விட்டீர்கள். இது நடந்திருந்தால், குறைந்தபட்சம் தி.மு.க., பெரும்பான்மை பெறுவதையாவது தடுத்திருக்கலாம். 2021ல் செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்' என, பழனிசாமியிடம் அமித் ஷா வலியுறுத்தியதாக தெரிகிறது.
சந்திப்பின்போது அமித் ஷாவும், பழனிசாமியும் தனியாக 20 நிமிடங்களுக்கு மேலாக பேசியுள்ளனர். அப்போது தினகரன், பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைப்பதில் சிக்கல்கள் குறித்து பழனிசாமி கூறியுள்ளார். கட்சியில் தலைமைக்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் போன்றவர்களை, கூட்டணி கட்சியான பா.ஜ.,வின் தலைவர்கள் சந்தித்து பேசும்போது, அவரை போலவே பலரும் கட்சித் தலைமைக்கு எதிராக கிளம்புவர். அது, அ.தி.மு.க.,வுக்கு மட்டுமல்ல; கூட்டணிக்கே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, செங்கோட்டையன் போன்றவர்கள் சந்திப்பை தவிர்க்க வேண்டும்' என பழனிசாமி வலியுறுத்தியதை அமித் ஷா கேட்டுக் கொண்டதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.
நேற்று பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவு: அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள், ராஜ்யசபா எம்.பி.,க்களுடன் அமித் ஷாவை சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்தோம்.
முகத்தை மூடியது ஏன்
அமித் ஷா - பழனிசாமி சந்திப்பு குறித்து, டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிய பழனிசாமிக்கு, அமித் ஷா எந்த உத்தரவாதமும் தரவில்லை. அமித் ஷா ஹிந்தியில் பேசியதை தொழிலதிபர் ஒருவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழகத்தில் பா.ஜ., 40 இடங்களில் போட்டியிட விரும்புகிறது' என அமித் ஷா தெரிவித்திருக்கிறார். வெற்றி வாய்ப்புள்ள 25 தொகுதிகளை தருவதாக பழனிசாமி பதிலளித்துள்ளார். அமித் ஷாவை சந்தித்து விட்டு பழனிசாமி வெளியே வந்தபோது, தன்னுடன் தொழிலதிபர் வருவதை, மீடியா வெளிச்சத்திற்கு தெரியாமல் இருக்க பழனிசாமி விரும்பினார். இதனால், அந்த தொழிலதிபரும், பழனிசாமியும் தங்கள் கைக்குட்டையால் முகத்தை மறைத்துள்ளனர். இவ்வாறு டில்லி வட்டாரங்கள் கூறின.
'
முகத்தை மூட வேண்டியது ஸ்டாலின்
' அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி டில்லி சென்றாலே, தி.மு.க.,வினரும், அவர்களது ஆதரவாளர்களும் பயந்து நடுங்குகின்றனர். கைக்குட்டையால் முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக போலி கதையை, 'செட்' பண்ணும் வேலைகளில், தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க.,வினரைப் போல ஆட்சிக்கு வருவதற்கு முன், கருப்பு பலுான்களை பறக்கவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் வெள்ளை குடையுடன், பழனிசாமி செல்லவில்லை. வெளிப்படையாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க சென்றார் என்பது நாடறியும். சந்திப்பு முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவசியம் அவருக்கு இல்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல், சிறுவர் முதல் கிழவி வரை நடமாட பயப்படும் நிலையை உருவாக்கியவர்கள் தான், முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். தேர்தல் வரும் நிலையில், மக்களை எதிர்கொள்ள முடியாமல், தி.மு.க.,வினர் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.