ஓ.பி.எஸ்.,ஸை கட்சியில் சேர்க்க பழனிசாமி தயார்! பா.ஜ., அழுத்தத்தால் மனமாற்றம்
ஓ.பி.எஸ்.,ஸை கட்சியில் சேர்க்க பழனிசாமி தயார்! பா.ஜ., அழுத்தத்தால் மனமாற்றம்
UPDATED : டிச 12, 2025 12:47 AM
ADDED : டிச 11, 2025 11:51 PM

எதையும் எதிர்பார்க்காமல், தனது தலைமையை ஏற்பதாக அறிவித்தால், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.,வில் சேர்க்க தயாராக இருப்பதாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகளும், பா.ஜ., தலைமையும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, பழனிசாமியின் நிலைப்பாட்டில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் பழனிசாமிக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சந்திப்பு
பொதுக்குழுவில் பேசிய பழனிசாமி, 'தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன், வலுவான கூட்டணி அமைப்போம்' என அறிவித்தார். இந்நிலையில், பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, பா.ஜ., மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்பு என, நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
முக்கியத்துவம்
வரும் 14ம் தேதி டில்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்கிறார். அதற்கு முன்பாக பழனிசாமியை சந்தித்துஇருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமித் ஷா சொல்லியே இந்த சந்திப்பு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தச் சந்திப்பின்போது, கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது என்பது குறித்தும், டில்லியில் அமித் ஷாவிடம் பன்னீர்செல் வம் வைத்த கோரிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளனர்.
சந்திப்பின்போது, மாவட்டத்துக்கு இரண்டு என்ற வகையில், பா.ஜ., போட்டியிட விரும்பும் 76 சட்டசபை தொகுதிகளுக்கான பட்டியலையும், நயினார் நாகேந்திரன் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: த.வெ.க., கணிசமான ஓட்டுகளை பிரிக்கும் என்பதால், வரும் சட்டசபை தேர்தல் சவாலானதாக மாறியுள்ளது. பன்னீர்செல்வமும், தினகரனும் தனித்தோ, வேறு கூட்டணியில் இணைந்தோ போட்டியிட்டால், முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாகி விடும்.
தென் மாவட்டங்களில் வெற்றி பெற வேண்டுமானால், பன்னீர்செல்வமும், தினகரனும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு அவசியம் என, அம்மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகள் விரும்புகின்றனர். கள நிலவரம் குறித்து எடுக்கப்பட்ட பல்வேறு சர்வே முடிவுகளும் அதையே தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அதையே வலியுறுத்துகிறார். அவரது விருப்பத்தை தான், பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் எடுத்துக் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பழனிசாமி, 'அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்து விட்டு, தினகரன் தனிக்கட்சி நடத்தி வருகிறார். என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டேன். அ.தி.மு.க.,வை தோற்கடிப்பதே தன் லட்சியம் என பேசி வருகிறார். எனவே, அவரை அ.தி.மு.க.,வில் அல்லது கூட்டணியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை' என, திட்டவட்டமாக கூறியுள்ளார்.
'தி.மு.க., எதிர்ப்புதான் அ.தி.மு.க.,வின் அரசியல். ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தான் வெற்றி பெறும் என்கிறார் பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். இப்படி தி.மு.க.,வுடன் இணக்கமாக இருப்பவரை, அ.தி.மு.க.,வினர் ஏற்க மாட்டார்கள்.
அவரை சேர்த்தால் என்னையும் ஏற்க மாட்டார்கள். எதையும் எதிர்பார்க்காமல், 'பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறேன்' என பகிரங்கமாக அறிவித்தால், பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம்' என, நயினார் நாகேந்திரனிடம் பழனிசாமி கூறியிருக்கிறார்.
'தேசிய அளவில் பா.ஜ., பெரிய கட்சியாக இருக்கலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க.,தான், எந்த கட்சியை கூட்டணியில் சேர்ப்பது என முடிவு செய்யும்' என்றும், பழனிசாமி உறுதியாக கூறி விட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.
தினகரனை சேர்க்க முடியாது என கூறிவிட்ட பழனிசாமி, பன்னீர்செல்வத்தை சேர்க்க நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படும் நிலையில், அ.தி.முக., - பா.ஜ., கூட்டணியை விரிவுபடுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
டில்லியில் அமித் ஷாவை சந்தித்த பின், நயினார் நாகேந்திரன் மீண்டும் பழனிசாமியை சந்தித்து, இதுதொடர்பாக பேசுவார் என்கிறது, தமிழக பா.ஜ., வட்டாரம்.
- -நமது நிருபர் --

