கனிமொழி உள்ளிட்டோர் கண்டனத்தால் திருவள்ளுவர் படத்தை நீக்கிய பழனிசாமி
கனிமொழி உள்ளிட்டோர் கண்டனத்தால் திருவள்ளுவர் படத்தை நீக்கிய பழனிசாமி
ADDED : பிப் 22, 2026 02:18 AM

சென்னை: தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை தொடர்ந்து, சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த, காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி நீக்கினார்.
உலக தாய்மொழி தினத்தையொட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தன் 'எக்ஸ்' பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டிருந்தார். அதில், திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்தது.
இந்த பதிவை, தன் 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்த தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, 'பா.ஜ., மீதான விசுவாசம், பழனிசாமியை முழு 'சங்பரிவார்' சேவகராகவே மாற்றி விட்டது. இப்போது, அவர்களை போலவே திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச துவங்கி விட்டார்' என விமர்சித்தார்.
இதுபோல, தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, உலக தாய்மொழி தின வாழ்த்து செய்தியில் இருந்த, காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை பழனிசாமி நீக்கினார்.
காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட பதிவு.

