முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை முதல்வருக்கு பழனிசாமி கோரிக்கை
முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை முதல்வருக்கு பழனிசாமி கோரிக்கை
ADDED : பிப் 09, 2024 12:21 AM

சென்னை : 'தி.மு.க., ஆட்சியில், கடந்த 32 மாதங்களில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது தொடர்பாக, முழுமையான வெள்ளை அறிக்கையை முதல்வர் வெளியிட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 32 மாதங்களில், ஐக்கிய அரேபிய நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா, சிங்கப்பூர் சுற்றுப்பயணம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ஸ்பெயின் சுற்றுப்பயணம் என, இரவு, பகலாக உழைக்கும் முதல்வரின் முயற்சியால், எவ்வளவு நேரடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.
தொடர்ந்து முன்னணி
எத்தனை தொழிற்சாலைகள் செயல்படத் துவங்கி உள்ளன; எவ்வளவு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என, அரசு முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கடந்த மாதம் 27ம் தேதி ஸ்பெயின் சென்ற முதல்வர், பல தொழில் நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க முன்வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் தொன்றுதொட்டு உற்பத்தி மாநிலமாக திகழ்கிறது. காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எடுத்த தொடர் முயற்சிகள் காரணமாக, தொழில் துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னணியாக திகழ்கிறது.அ.தி.மு.க., ஆட்சியில், 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, அன்னிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அதில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் முறையே, 60 சதவீதம் மற்றும் 90 சதவீதம் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
என் ஆட்சியில் தொழில் நிறுவனங்கள், தொழில் முதலீட்டாளர்கள் எளிதில் என்னை அணுக முடிந்ததால், கொரோனா தொற்று காலத்தில் கூட, பல தொழில் முதலீடுகளை ஈர்க்க முடிந்தது.
ஆனால், தி.மு.க., ஆட்சியில் உயர்மட்டக் குழு, அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டதால், எந்தவிதமான பயனுமில்லை. மீண்டும் கோப்புகள், பல அமைச்சர்கள் வழியாக, முதல்வர் வரை செல்ல வேண்டி உள்ளது.வரும் 2030க்குள் ஒரு 'டிரில்லியன் டாலர்' முதலீட்டை கொண்டு வருவேன் எனக் கூறியதற்கு, இதுநாள் வரை வரைவு அறிக்கை எதுவும், தி.மு.க., அரசால் வெளியிடப்படவில்லை.
சந்தேகம்
ஸ்பெயின் பயணத்தால், மூன்று நிறுவனங்கள் வழியாக, 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, அவர்களை அழைத்திருக்கலாம்.
எனவே, முதல்வர் ஸ்பெயின் சென்றது முதலீட்டை ஈர்க்கவா அல்லது முதலீடு செய்யவா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. இதை, முதல்வர் தான் விளக்க வேண்டும்.
எனவே, முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற 32 மாதங்களில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

