முகாமில் இருப்போரை வெளிநாடு அனுப்ப முதல்வருக்கு பழனிசாமி கோரிக்கை
முகாமில் இருப்போரை வெளிநாடு அனுப்ப முதல்வருக்கு பழனிசாமி கோரிக்கை
ADDED : மார் 03, 2024 02:57 AM
சென்னை : 'ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையானவர்கள், அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல தேவையான நடவடிக்கைகளை, வெளியுறவு துறையும், முதல்வரும் எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக சிறையில், 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த, இலங்கை தமிழர்கள் ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் ஆகியோர், 2022 நவ., 11ல் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை குடிமக்கள் என்பதால், அயல் நாட்டிற்கு அனுப்பும் வரை, நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து, திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் சிறப்பு முகாமின், மனிதத் தன்மையற்ற நிர்வாகம் காரணமாக, சாந்தன் உடல்நிலை மோசமடைந்து, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த, 28ம் தேதி, அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
முகாமில், அவர்கள் சக முகாம்வாசிகள் யாருடனும் பேசவோ, பழகவோ, உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டு, தனிமை அறையில் சிறை போலவே அடைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதன் நோக்கமே, அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது தான். முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பே, வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இன்றைய நாள் வரை, அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக, அரசு எந்தவித முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.
இனியாவது மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, அவர்கள் எஞ்சிய வாழ்நாளை, அவர்களின் குடும்பத்துடன் வசிப்பதற்கு, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல தேவையான நடவடிக்கைகளை, வெளியுறவுத்துறையும், தமிழக முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

