மக்களின் வரிப்பணம் வீணடிப்பு பழனிசாமி கடும் கண்டனம்
மக்களின் வரிப்பணம் வீணடிப்பு பழனிசாமி கடும் கண்டனம்
ADDED : ஜூலை 07, 2025 01:10 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை:
ஆட்சியில் அமர்வது, மக்களுக்கு நன்மை செய்வதற்கு என்ற நிலை மாறி, லஞ்ச லாவண்யத்தில் திளைத்து, தங்களை வளப்படுத்துவதற்காகவே என்ற நோக்கோடு, தி.மு.க., அரசு, கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
ஆட்சியின் தவறுகளை மூடி மறைக்க, தங்களின் ஒவ்வொரு செய்கையையும், நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு, வெற்று விளம்பரங்கள் செய்து வருகிறது.
அந்த விளம்பரங்களை, தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,620 ஊராட்சிகளில் வெளியிட வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு மூன்று நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு, ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும். மதுரையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு, எல்.இ.டி., திரைகளைப் பொறுத்தும் பணியை வழங்க வேண்டும்.
அதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஒவ்வொன்றும், சந்தை விலையை விட அதிகமாக, அதாவது ஒரு எல்.இ.டி., திரைக்கு 7.50 லட்சம் ரூபாய்; ஊராட்சிகள் ஒவ்வொன்றும் சிறிய எல்.இ.டி., திரையை வாங்க, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களும், ஊராட்சி செயலர்களும், அந்நிறுவனத்திற்கு உடனடியாக கொள்முதல் ஆணையுடன், எல்.இ.டி., திரைக்கான தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
'கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்' என்பதையே கொள்கையாக வைத்து செயல்படும் ஊழல் மாடல் தி.மு.க., அரசு, எல்.இ.டி., திரை அமைக்கும் திட்டத்தில், பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்க முயல்வது கண்டனத்துக்குரியது.
மக்களின் வரிப்பணத்தை, வீண் விரயம் செய்யும் திட்டத்தை, அரசு உடனடியாக கைவிட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை, தங்களின் சுயநலத்திற்காக செலவிடுவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.