நிரந்தர டி.ஜி.பி.,யை நியமிக்க அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
நிரந்தர டி.ஜி.பி.,யை நியமிக்க அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
ADDED : நவ 10, 2025 12:29 AM

சென்னை: 'மத்திய தேர்வாணைய விதிகளின்படி, அவர்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து, மூத்த காவல் துறை அதிகாரியை, டி.ஜி.பி.,யாக உடனடியாக நியமிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் காவல் துறை செயல்படுகிறதா என தெரியவில்லை. தமிழக மக்கள் அனைவரையும் தி.மு.க., அரசு வாட்டி வதைத்து வருகிறது.
தினந்தோறும், தணலில் இட்ட புழுவாக மக்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர். சிறுமியர் முதல் மூதாட்டிகள் வரை, யாரும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரும்பாடுபட்ட காவல் துறை, தற்போது நிர்வாக திறனற்ற முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடற்ற நிலையால், சீர்கெட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துரைக்கும் சமூக ஊடகங்களை முடக்குவது, தி.மு.க., அரசின் சாதனையாக உள்ளது.
நான்கு ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், 6,999 சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு, 104 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளதாக சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
இது, சட்டம் - ஒழுங்கின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஜூலை முதல் அக்டோபர் வரை, நான்கு மாதங்களில் 501 கொலைகள், 156 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.
முதல்வரின் கொளத்துார் தொகுதியில், கஞ்சா போதையில் தெருவில் சென்றவர்களை தாக்கிய 'சிசிடிவி' காட்சிகளை வெளியிட்ட வீட்டு உரிமையாளர்களை, சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபோல் செய்தால், குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல யார் முன் வருவர்? கடந்த 54 மாத தி.மு.க., ஆட்சியில், காவல் துறை தன் கம்பீரத்தை இழந்துள்ளது.
நிரந்தர டி.ஜி.பி., இருந்தபோதே சிறப்பாகச் செயல்படாத காவல் துறையின் செயல்பாடுகள் இப்போது கேள்விக்குறியாகி உள்ளன.
ஆகஸ்ட் மாதம், தமிழக டி.ஜி.பி., பதவி காலியானதும், தகுதியான அதிகாரியை நியமிக்கவில்லை. வேண்டுமென்றே நிரந்தர டி.ஜி.பி.,யை நியமிக்காமல், தற்காலிக டி.ஜி.பி.,யை நியமித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் வரை சென்றும், நிரந்தர டி.ஜி.பி.,யை நியமனம் செய்யவில்லை. இது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளிக்க, தமிழக அரசிற்கு மூன்று வாரம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சி, அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் வகையில், காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். மத்திய தேர்வாணைய விதிகளின்படி, அவர்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து, மூத்த காவல் துறை அதிகாரியை டி.ஜி.பி.,யாக உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

