டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விட பழனிசாமி வலியுறுத்தல்
டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விட பழனிசாமி வலியுறுத்தல்
ADDED : ஏப் 16, 2025 06:20 PM

சென்னை:'நாளை புனித வெள்ளியையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது, இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும் நினைவுகூர்ந்து, உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களால், ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.
இயேசு அனுபவித்த கஷ்டங்களையும், சிலுவையில் தன்னையே தியாகம் செய்ததையும் நினைவு கூர்ந்து, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து, தேவாலயங்களில் பிரார்த்ததனை செய்வது வாடிக்கை.
இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கும்படி, கிறிஸ்தவ மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று, நாளை 18ம் தேதி, புனித வெள்ளி அன்று, மாநிலம் முழுதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.