வக்பு சட்ட திருத்த மசோதாவை கைவிட பழனிசாமி வலியுறுத்தல்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கைவிட பழனிசாமி வலியுறுத்தல்
ADDED : ஜன 30, 2025 10:06 PM
சென்னை:'வக்பு சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கைவிட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பாக, திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட, பார்லிமென்ட் கூட்டுக் குழு, பல்வேறு தரப்பினர் முன்வைத்த பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, அவசர அவசரமாக, சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது; இது ஏற்புடையதல்ல.
வக்பு வாரிய சொத்துக்கள் என்பது, முஸ்லிம் பெரியவர்கள் அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், இறை இல்லங்களை எழுப்பி வழிபாடு செய்வதற்காகவும், சமூக நலத் தொண்டுகளுக்காகவும் கொடுத்த சொத்துக்களாகும். இந்த சொத்துக்களை பயன்படுத்தும் முழு உரிமையும், முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு மட்டுமே உண்டு என்றாலும், அதை தனிப்பட்டவர்கள் உரிமை கூட கொண்டாட அனுமதி இல்லை. அதனால், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுவதில்லை.
தமிழகம் உட்பட நாடெங்கும் உள்ள வக்பு சொத்துக்கள், வக்பு சட்டம் 1995ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தில், திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, வக்பு சொத்துகள் மீதான, முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாகவும், இதனால், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், அடக்க ஸ்தலங்கள் மீதான உரிமைகளும் பறிபோகும் வாய்ப்புள்ளதாகவும், சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்கள் அச்சப்படுகின்றனர்.
இந்த சட்ட திருத்தம், வக்பு சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என மத்திய அரசு கூறினாலும், சட்டத்தின் ஷரத்துக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்ற முஸ்லிம்களின் அச்சம் நியாயமானதுதான். எனவே, மத்திய அரசு, சிறுபான்மையினரின் உணர்வுகளை மதித்து, வக்பு வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.