வாக்காளர் திருத்தப்பணி முறைகேடுகளில் தி.மு.க., ஈடுபடும்; மா.செ.,க்களுக்கு பழனிசாமி எச்சரிக்கை
வாக்காளர் திருத்தப்பணி முறைகேடுகளில் தி.மு.க., ஈடுபடும்; மா.செ.,க்களுக்கு பழனிசாமி எச்சரிக்கை
ADDED : நவ 06, 2025 07:16 AM

சென்னை: 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது, தி.மு.க.,வின் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில், மாவட்டச் செயலர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அதிகாரத்தில் இருப்பதால், வாக்காளர் பட்டியலில் தங்களுக்கு சாதகமாக பல்வேறு முறைகேடுகளில் தி.மு.க., ஈடுபடும்.
கண்காணிக்கணும் அதை தடுத்து நிறுத்த வேண்டும். தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள், பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதையும், இறந்தவர்கள், வேறு தொகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள் பெயர்கள், தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் பெயர்கள் நீக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
இப்பணிக்காக, வாக்காளர்களின் வீடுகளுக்கு அரசு ஊழியர்கள் செல்லும்போது, அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களும் உடன் சென்று, திருத்தப் பணிகள் முறைப்படி நடக்கிறதா என கண்காணிக்க வேண்டும்.
தவறுகள் நடந்தால், சுட்டிக்காட்டி தடுக்க வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை மாவட்டச் செயலர்கள் வழங்க வேண்டும்.
இப்பணியில் ஈடுபடும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் அரவணைத்து செல்ல வேண்டியது, மாவட்டச் செயலர்களின் பொறுப்பு.
நடவடிக்கை கட்சி தலைமை என்ன சொல்கிறதோ, அதை செய்ய வேண்டும்; எதிராக செயல்பட்டால், செங்கோட்டையன் போல நீக்கப்படுவர். ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி யை உறுதிப்படுத்த வேண்டியது மா.செ.,க்களின் கடமை. அதில் தவறினால் , உடனே நடவடிக்கைக்கு உள்ளாவர்.
இவ்வாறு அவர் பேசியதாக கட்சியினர் தெரிவித்தனர்.
கூட்டம் முடிந்த பின், மாவட்டச் செயலர்களை தனியே அழைத்து பழனிசாமி பேசினார்.

