அவசர வேலையாக டில்லி சென்ற பழனிசாமி: உதயநிதி கிண்டல்
அவசர வேலையாக டில்லி சென்ற பழனிசாமி: உதயநிதி கிண்டல்
ADDED : மார் 29, 2025 05:32 AM
சென்னை: ''எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அவசர வேலையாக டில்லி சென்று திரும்பியுள்ளார்,'' என, துணை முதல்வர் உதயநிதி கிண்டல் அடித்தார்.
சட்டசபையில் நேற்று அவர் பேசியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அவசர வேலையாக டில்லி சென்று திரும்பியுள்ளார். நான் பதிலுரை வழங்கும் நேரத்தில், ஒருமுறை கூட அவர் சபையில் இருப்பதில்லை. அதை நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் காரில் ஏறிச் செல்ல அவர் முயன்றார். 'தயவு செய்து, என் காரை எடுத்து செல்லுங்கள்; எனக்கொன்றும் பிரச்னையில்லை' என்று நான் சொன்னேன்.
அப்போது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எழுந்து, 'எங்கள் கார் தவறாக எங்கும் சென்று விடாது' என்று சொன்னார்.
ஆனால், இன்றைக்கு டில்லியில் ரூட் மாறி, கிட்டத்தட்ட மூன்று கார்கள் மாறி சென்றிருக்கிறார். அவரது கட்சி அலுவலகத்திற்கு சென்றிருப்பதாக சொன்னார். அதற்கு வாழ்த்துகள்.
பொதுவாக ஒரு காகிதத்தில் எழுத ஆரம்பிக்கும்போது, 'உ' போட்டு அதற்கு கீழே இரண்டு கோடுகள் போட்டு எழுத துவங்குவர்.
ஆனால், முதல்வர் 'ரூ' போட்டு பட்ஜெட்டை ஆரம்பித்திருக்கிறார். எத்தனை ரூல்ஸ் போட்டாலும், அதை முதல்வர் தடுப்பார்.
இப்படிப்பட்ட தலைவர் இருக்கும் வரை, தமிழகத்துக்குள் ஹிந்தி திணிப்பு மட்டுமல்ல; எந்த திணிப்பையும் யாராலும் கொண்டு வந்து விட முடியாது.
விளையாட்டு வீரர்கள் யாருக்காவது போட்டிகளில் பங்கேற்க நிதியுதவி தேவைப்பட்டால், www.tnchampions.sdat.in என்ற இணைதயளத்தில் விண்ணப்பிக்கலாம். நிச்சயம் அவர்களின் திறமைக்கு ஏற்ப நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.