பொய்க்கு தாவி செல்லும் பழனிசாமி *அமைச்சர் நேரு கிண்டல்
பொய்க்கு தாவி செல்லும் பழனிசாமி *அமைச்சர் நேரு கிண்டல்
ADDED : ஜன 23, 2025 09:29 PM
சென்னை:'ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி, சமீப காலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்க்கு தாவி தாவி செல்ல பழகிக் கொண்டிருக்கிறார்' என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
'தி.மு.க., அரசு, 20 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியிருந்தார். இந்த பொய் குற்றச்சாட்டை ஆதாரத்தோடு மறுத்து, 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என, சிவகங்கை விழாவில், புள்ளி விவரத்தோடு பழனிசாமியின் பொய் முகத்தை முதல்வர் கிழித்தெறிந்தார்.
தமிழக மக்கள் முன்பு, பழனிசாமியின் பொய் அம்பலப்பட்டு விட்டதால், ஆட்சிக்கு வரும் முன்பு புகார் பெட்டி வைத்து தி.மு.க., பெற்ற மனுக்கள் நிலை என்னவென்று தெரியவில்லை என்ற புதிய பொய்யை கூறியுள்ளார். தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அனைத்து மனுக்களும், உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, 100 நாட்கள் முடிவில் 2.29 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டு, உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்ந்தன.
ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி, சமீப காலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்க்கு தாவி தாவி செல்ல பழகிக் கொண்டிருக்கிறார். முதல்வரின் முகவரி துறையின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் நலனுக்காக திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வரும் முதல்வர் மீதும், அரசு மீதும் அவதூறு பரப்ப, அ.தி.மு.க., போடும் கணக்குகளை, தமிழக மக்கள் தவிடு பொடியாக்குவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

