ADDED : அக் 15, 2024 06:27 AM
ஓமலுார் : ''சட்டசபை தேர்தலில், பழனிசாமி நல்ல கூட்டணி அமைப்பார்; கவலை வேண்டாம். மனகசப்புகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்,'' என, ஓமலுாரில் நடந்த அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
சேலம் புறநகர் மாவட்டம், ஓமலுார் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., ஓமலுார் மேற்கு ஒன்றியம், தாரமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம், நேற்று ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமையில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. மக்கள் மத்தியில் ஒரே பேச்சு என்னவென்றால், அ.தி.மு.க., ஆட்சி எப்போது வரும் என்பது தான். 100 ஏரி நிரப்பும் திட்டம், அத்திக்கடவு - அவினாசி திட்டம், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் என, பல திட்டங்களுக்கு முனைப்பு காட்டியவர் பழனிசாமி.
தி.மு.க., ஆட்சியில் ஒரு திட்டம் கூட நிறைவேற்றப்படவில்லை. திட்டமே இல்லாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது. ஆளுங்கட்சியே ஒன்றும் செய்யாத நிலையில், சேலம் எம்.பி., என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.
லோக்சபா தேர்தல் வேறு; சட்டசபை தேர்தல் வேறு என, மக்களுக்கு நன்றாக தெரியும். அ.தி.மு.க., ஒரு தோல்வியை சந்தித்தால், அடுத்து மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது கடந்த கால சரித்திர உண்மை.
தி.மு.க., ஆட்சியில், அ.தி.மு.க.,வினர் பொய் வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
பூத் வாரியாக ஏஜென்ட்கள் ஒவ்வொருவரும் தலா, 30 வீடுகளை மட்டும் சந்தித்து, அவர்களது ஓட்டுகளை பெற்றால் போதும்; எளிதாக வெற்றி பெற முடியும்.
சட்டசபை தேர்தலில் பழனிசாமி நல்ல கூட்டணி அமைப்பார்; கவலை வேண்டாம். மனகசப்புகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.