ADDED : ஏப் 17, 2025 02:44 AM
சென்னை:அ.தி.மு.க., கொடி விவகாரம் தொடர்பாக, தினகரனுக்கு எதிராக, பழனிசாமி தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், கடந்த 2018ல், 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், புதிய கட்சி துவக்கினார்.
அப்போது, அ.தி.மு.க., கொடியை போன்று கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களுடன் கொடியின் நடுவே ஜெயலலிதா உருவப்படம் பதித்த கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கொடியை தினகரன் பயன்படுத்த தடை கோரி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சென்னை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், சிவில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி தமிழரசி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை வாபஸ் பெறுவதாக, பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.