தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பழனிசாமிக்கு ஆதங்கம்: ரகுபதி
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பழனிசாமிக்கு ஆதங்கம்: ரகுபதி
ADDED : ஜூலை 26, 2025 03:36 AM
புதுக்கோட்டை: ''நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி தி.மு.க.,வில் சேர்க்கவில்லை,'' என்று கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் அவர் அளித்த பேட்டி:
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசாரத்தில், உதயநிதிக்கு துணை முதல்வராக என்ன தகுதி உள்ளது என்று பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு இயக்கத்தில் ஒருவரை துணை முதல்வராக தேர்ந்தெடுக்க, அவருக்கான தகுதியை அடிப்படையாகக் கொண்டு, அந்த இயக்கம் தான் தேர்ந்தெடுக்குமே தவிர, எதிர்க்கட்சிகளை கேட்டு, ஒரு துணை முதல்வரையோ, அமைச்சரையோ தேர்வு செய்வதில்லை.
து ணை முதல்வருக்கான அனைத்து தகுதியும் உதயநிதிக்கு உள்ளது. அ.தி.மு.க., கொண்டு வந்த காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக செயல்படுத்தவில்லை என்று பழனிசாமி கூறி வருகிறார்.
நாங்கள் அந்த திட்டத்தை கைவிடவில்லை. அவர்கள் போட்ட திட்டம் தான் தவறு. இருந்தாலும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மக்கள் பயனடையும் வகையில், இத்திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தும்.
'ஓரணியில் தமிழகம்' திட்டம் வாயிலாக தி.மு.க.,வில் உறுப்பினர் சேர் க்கை நடப்பது கண்டு, ஆதங்கத்தில் புழுங்குகிறார் பழனிசாமி. யாரையும் கட்டாயப் படுத்தி ஒரு இயக்கத்தில் உறுப்பினராக்க முடியாது. சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னதும், அவர்கள் தாங்களாகவே தி.மு.க., வில் சேருகின்றனர்.
தோல்வியே காணாத ஒரு தலைவர் உண்டென்றால், அது எங்கள் தலைவர் ஸ்டாலின் தான். ஆனால், தோல்விக்கு பிறந்தவர் பழனிசாமி. இதுதான் இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம்.
இவ்வாறு ரகுபதி கூறினார்.