ADDED : நவ 20, 2025 01:22 AM

சென்னை: பிரதமர் மோடி நேற்று, கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ரசாயன உரங்கள் பயன்படுத்தும்போது கிடைப்பதை விட, இயற்கை விவசாயத்தில் உற்பத்தி குறைவாக உள்ளது.
ஆனால், விலையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. எனவே, இயற்கை விவசாயத்திற்கு தேவையான மண்புழுக்கள், வேப்பம் புண்ணாக்கு, நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை, மானிய விலையில், மத்திய அரசு வழங்க வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்பு ஊக்கத் தொகை, நேரடி மானியம் வழங்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட, கோவை, மதுரை பகுதிகளின் வளர்ச்சிக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
கோவை - பெங்களூரு இடையே, இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும். பெங்களூருவுக்கு அதிகாலை 5:30 மணியளவில் சென்றடையும் வகையில், ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தன.

