ADDED : நவ 20, 2025 01:23 AM
கோவை: கோவையில் நடந்த விவசாயிகள் மாநாட்டில், தமிழக அனைத்து உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:
நம்மை போன்ற சாதாரண விவசாயிகள் அழைத்தபோது, நேரம் ஒதுக்கி, கோவைக்கு வந்து மாநாட்டில் பங்கேற்றுள்ள, உலகமே வியந்து பார்க்கும் பிரதமரை வரவேற்கிறேன்.
பல ஆண்டுகளாக இருந்த காவிரி பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி. ஜல்லிக்கட்டு என்பது வீர விளையாட்டு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோது, தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, அவசர சட்டம் நிறைவேற்றி, உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கொடுத்தது சிறப்பு.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் போராடியபோது, கோரிக்கையை ஏற்று, பாதுகாக்கப்பட்ட மண்டலமாக பிரதமர் அறிவித்தார்.
மண் மலட்டுத்தன்மை அடைந்திருக்கிறது. விளைவிக்கும் பொருட்கள் விஷமாகி வருகின்றன. கோவை மண்டலம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும். மலைப்பகுதியில் இருந்து வரும் விலங்கினங்கள் மனிதர்களை கொல்கிறது; விவசாயத்தை பாழ் செய்கிறது.
மலை வளத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில், ஒருங்கிணைந்த சட்டம் கொண்டு வர வேண்டும். தொழிலும் வளர்ச்சி அடைய வேண்டும். உணவு உற்பத்தியும் பெருக வேண்டும்.
குளங்கள், நீர் நிலைகள், பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களில் கட்டுமானங்கள் உருவாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

