விவசாயிகளை சந்தித்து பேசி உத்வேகம் தந்த பிரதமர் மோடி
விவசாயிகளை சந்தித்து பேசி உத்வேகம் தந்த பிரதமர் மோடி
ADDED : நவ 20, 2025 01:24 AM

கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் இயற்கை விவசாயிகள், ஆராய்ச்சி யாளர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
கலந்துரையாடல் குறித்து, கிணத்துக்கடவு விவசாயி சம்பத்குமார் கூறுகையில், ''பல அடுக்கு மாதிரி பண்ணை அமைத்ததை பிரதமர் பார்வையிட்டார். பல அடுக்கு மாதிரி விவசாயத்தில் லாபம், நாட்டு மாட்டு விவசாயம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் கேட்டறிந்தார். இயந்திரவியல் துறையில் பிஎச்.டி., முடித்து, இயற்கை விவசாயம் செய்யும் என்னை பாராட்டினார். உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்தது,'' என்றார்.
நல்ல வரவேற்பு மாதம்பட்டி விவசாயி விஜயன் கூறுகையில், ''இயற்கை விவசாயம் குறித்து மக்களிடம் வரவேற்பு, விழிப் புணர்வு குறித்து கேட்டறிந்தார். மண்ணை எப்படி தயார் செய்வது, வளப்படுத்துவது, விளைச்சலுக்கு எடுத்துக்கொள்ளும் காலம் குறித்து கேட்டறிந்தார். பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கியதும், சந்தோஷம் அடைந்தார்,'' என்றார்.
பாராட்டினார் பிரதமர் கொடுவாய் பகுதியை சேர்ந்த விவசாயி மோகன்குமார் கூறுகையில், ''இயற்கை விவசாயத்தில், இடுபொருட்களாக பஞ்சகாவ்யம், மண்புழு உரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறேன். விளைச்சல் அதிகம் கிடைக்கிறதா என கேட்டறிந்த பிரதமர், மக்களிடம் கொண்டு செல்வது நல்ல விஷயம் என பாராட்டினார்,'' என்றார்.
மக்கள் அழிந்துவிடுவர் நம்மாழ்வார் விருது பெற்ற பல்லடம், கேத்தனுார் பகுதியை சேர்ந்த பழனிசாமி கூறுகையில், ''நமது தாத்தா, பாட்டி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய முறையை செய்து வருகிறேன். நாட்டு மாடுகள், ஆடு, கோழி வைத்து விவசாயம் செய்கிறோம். காங்கேயம் மாடு என்றாலே உரத்தொழிற்சாலை எனலாம். ஒரு மாடு இருந்தாலே இயற்கை உரம் தயாரிக்கலாம். இயற்கை வழியில் உரம் தயாரிப்பு குறித்து விளக்கியுள்ளேன். இளைஞர்கள் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். அது இல்லையேல் மக்கள் அழிந்துவிடுவர்,'' என்றார்.
தன்னிறைவு தரும்! நம்மாழ்வார் விருது பெற்ற இருகூர் அத்தப்பகவுண்டன்புதுாரை சேர்ந்த தங்கவேலு கூறுகையில், ''இயற்கை விவசாயத்தில் ஒரு சென்ட் நிலத்தில், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரண்டு மணி நேரம் இலவச விவசாய பயிற்சி அளித்து வருகிறேன். குடும்பத்துக்கு தேவையான காய்கறியை ஒரு சென்ட் இடத்தில் எடுத்துக்கொள்ள முடியும். பல அடுக்கு விவசாயம் செய்கிறேன். ஆரோக்கியமான வாழ்க்கை, நஞ்சில்லா உணவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தன்னிறைவு பெற, இயற்கை வேளாண்மையே வழிவகுக்கும்,'' என்றார்.

